Wednesday, December 31, 2014

தெற்கு சூடான் பயணக் குறிப்பு 10

இருபுறமும் புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் வாகனத்தை அதுவும் இருள் சூழ்ந்த இரவில் செலுத்துவது சிரமமாகவே இருந்தது.
நல்லவேளை எதிரில் வாகனங்கள் போக்குவரத்து எதுவுமில்லை.

இரவு 11 மணியளவில் பாதை ஒரு ஊர் போல தோற்றமளித்த இடத்தை அடைந்தது.
ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. மிக குறைந்த வேகத்தில் வாகனத்தை செலுத்தி ஆட்கள் தென்படுகிறார்களா என்று பார்த்தோம்.
இதுபோன்ற அனுபவங்கள் சர்வாதிகார ஆட்சி நடந்த ஜைரே நாட்டில் இப்போது காங்கோ என்று அழைக்கப் படுகின்ற நாட்டில் பெற்றதுண்டு ஆனாலும் தெற்கு சூடான் அனுபவம் புதுமையானது.

சிறிது நேரத்தில் கண்ணில் பட்ட ஒருவரிடம் நாங்கள் போகவேண்டிய நார்வேஜியன் நாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சென்றடைந்தோம்.

நல்ல இருட்டு. நாள்முழுக்க பயணித்த களைப்பு பசிவேறு துன்புறுத்திக் கொண்டிருந்தது.

பெரிய நிலப்பரப்பில் மூங்க்கில் வேலி அமைக்கப்பட்ட காம்ப்.
அதனுள் வேயப்பட்ட குடில்கள் ஒவ்வொன்றும் அலுவலகமாகவும் உறங்குமிடமாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

அதன் காப்பாளர் எங்களை வரவேற்று எங்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த குடில்களுக்கு அழைத்துச்சென்றார்.

ஆளுக்கொரு தனிக்குடில் தரப்பட்டது. உண்ண உணவும் தயாராக இருப்பதாகவும் இன்னும்
10 நிமிடங்களில் வாருங்கள் என்று சொன்னார்.

எனக்கு ஒதுக்கப்பட்ட குடிலை பார்வையிட்டேன். விஷப் பூச்சிகள் மற்றும் தேள் அதிகம் உள்ள இடம் என்று முன்னரே அறிந்திருந்ததால் கிலி மனதில் ஊர்ந்து கொண்டே இருந்தது.

வட்டமாகவும் நடுவில் ஒன்றுமாக மரக் கிளைகள் நடப்பட்டு கூரையில் கோரைப்புல் வேயப்பட்டிருந்தது. ஒரு மரக்கட்டிலில் மெத்தையும் போடப் பட்டிருந்ததது. ஏற்கனவே உறக்கம் கண்ணில் சொக்கிகொண்டு வந்தது.
பசியை போக்கிவிட்டு உறங்க வேண்டும்.
(தொடரும்)
 

No comments: