Tuesday, January 20, 2015

பெண்கல்வியின் அருமை தெரிந்த பெண் / கல்விக்கு உற்சாகம் கொடுத்த குடும்பம்

பெண்கல்வி பற்றி நிறைய பேசுபவர்கள் கூட தன் மனைவியின் படிப்பு பற்றி அக்கரை காட்டுவதில்லை. எத்தணை பேர் திருமணத்துக்கு பிறகு தன் மனைவியை படிக்க வைக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் தன்னை விட அதிகமாக படிக்க வைத்திருக்கிறார்களா? படிக்க வைத்தாலும் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்களா? வெகு சொற்ப நபர்கள் மட்டுமே இருப்பார்கள். அதில் ஒருவர் தான் என்னவர்.

திருமணத்தின் போது சமமான கல்வித்தகுதி தான். இருவரும் பத்தாப்பு. நான் +2 தேர்வு எழுதி இருந்தேன், ரிசல்ட் வரவில்லை. திருமணம் முடித்து இருவரும் முதன்முதலில் வெளியே போனது நான்கு நாட்கள் கழித்து +2 ரிசல்ட் வாங்க தான்.



அதன் பிறகு தபால் மூலம் சில டிகிரிகள் சுயமாக. ஆனாலும் ஒவ்வொரு டிகிரிக்கும் அவர் தந்த ஒத்துழைப்பு மாஷா அல்லாஹ். எனக்கு ஆங்கிலம்னா அல்வா சாப்பிடுவது போல. அவருக்கு ஆங்கிலம்னா அலர்ஜி. ஆனாலும் மாஷா அல்லாஹ், படிப்பு விஷயத்தில் ஈகோ என்பது இதுவரை ஒரு முறை கூட எங்களிடையே வந்ததில்லை.

என்னுடைய 32வது வயதில் பி.எட் என்னும் கல்வியியல் டிகிரி படிக்க ஆசைப்பட்டேன். வீடும் கட்டி ஹஜ்ஜுக்கும் போய் செலவானதில் சற்று பண நெருக்கடியில் இருந்த காலகட்டம் அது. 2009ம் வருடம். ஒரு வருட படிப்பு இது. மகள் 8ம் வகுப்பும் மகன் 1ம் வகுப்பும் படிச்சிட்டிருந்தாங்க. அதனால் என்னவர் தயங்க என் மாமனார் (அப்போது வயது 70க்கும் மேல்) நீ படிம்மா ஃபீஸ் நான் கட்டறேன்னு சொல்ல என்னை கல்லூரியில் சேர்த்து விட்டாங்க.

டவுன் பஸ்ஸில் போய் எனக்கு பழக்கமில்லை என்பதால் என்னவர் கல்லூரி செல்ல எனக்கு புது ஸ்கூட்டி வாங்கி தந்தார். கல்லூரி வீட்டில் இருந்து 18 கிமீ தூரம். போக வர தினம் 36 கிமீ ஒரு லிட்டர் பெட்ரோல் ஆகிவிடும். ஆனாலும் ஒரு நாள் கூட டவுன் பஸ்ஸில் போனதில்லை. தினமும் ஸ்கூட்டியில் பெட்ரோல், காற்று செக் பண்ணி வெச்சிருவாங்க மச்சான்.

காலை 8.15 க்கு கிளம்புவேன். அதுக்குள் சமையல் முடித்து பிள்ளைகளுக்கு லன்ச் போட்டு எனக்கும் எடுத்துக் கொள்வேன். மாலை 4.30க்கு முடியும் என்றாலும் நான் 3க்கே கிளம்ப ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருந்தேன்.

நான் படிக்கும் காலத்தில் நிறைய சார்ட், மாடல், ரெக்கார்ட்ஸ், அசைன்மெண்ட்ஸ் எல்லாம் செய்யணும். என் குடும்பமே எனக்கு செய்து கொடுக்கும். வெட்டும் ஒட்டும் வேலையெல்லாம் மாமனார் பார்த்துக்குவார். என்ன வேணும்னாலும் மச்சான் உடனே போய் வாங்கிட்டு வந்திருவாங்க. கொடுக்கும் அசைன்மெண்ட்டை லெக்சரர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அடுத்த நாளே முடிச்சிடுவேன். எப்படி ஃபேமிலில இருந்துட்டு உன்னால் உடனுக்குடன் முடிக்க முடியுதுன்னு பொறாமையா கேட்பாங்க.

மொட்டை மாடியில் போய் படிப்பேன். வெளிச்சம் போதவில்லை என்று சொன்னதும் என்னவர் உடனே ஸ்டேண்ட் உடன் டியுப்லைட் வாங்கி வந்து அவரே ஃபிட் பண்ணி ஒயரிங் செய்து இரண்டு மணி நேரத்தில் ரெடி பண்ணி கொடுத்திட்டார். நான் படிப்பதில் அவ்வளவு ஆசை அவருக்கு.

பரிட்சை நேரங்களில் காலையில் படித்து விட்டு சமையலறைக்கு வந்தால் சூடாக இட்லியும் சட்னியும் தயாராக இருக்கும். என் மாமனார் செய்திருப்பார். நீ போய் படிம்மா நான் பார்த்துக்கறேன்னு சொல்லி என்னை விரட்டி விடுவார்.

ஃபைனல் எக்ஸாம் டைம். இரவில் கண்விழித்து படிக்க நானும் என்னவரும் மொட்டை மாடிக்கு போய்விடுவோம். இருந்த ஒரு மடக்கு கட்டில் போட்டு எனக்கு கொடுத்து விட்டு கீழே பாய் விரித்து அவர் படுத்துக் கொண்டு நான் படித்து முடிக்கும் வரை தூங்காமல் கண்விழித்து கொண்டிருப்பார். இடையிடையே கீழே கிச்சனுக்கு வந்து ஹார்லிக்ஸ் கலக்கி வந்து எனக்கு கொடுப்பார். கலங்கிய கண்களுடன் இதை சொல்றேன் இத்தனைக்கும் அவர் பத்தாவது பாஸ் ஆகவில்லை... மாஷா அல்லாஹ்.

நான் சந்தோஷமாக படித்தேன். என் எழுத்தாற்றலும் ப்ரெசண்டேஷன் ஸ்கில்லும் எனக்கு எல்லா தேர்விலும் மார்க்கை அள்ளி தந்தது. முக்கால் வாசி வருடம் ஆங்கிலத்துக்கு ஆசிரியரே இல்லை. நான் தான் பிறருக்கு பாடம் நடத்துவேன். அந்த ஒரு வருட கல்லூரி வாழ்க்கையையும் மிகவும் ரசித்து வாழ்ந்தேன்.

கல்லூரியில் கேம்ப் மற்றும் போட்டிகள் நடந்தன. பேச்சு, ஓவியம், பட்டிமன்றம், நாடகம், ரங்கோலி, கட்டுரை, கவிதை, சமையல் என கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் என்னவர் ஒத்துழைக்க பரிசுகளை அள்ளினேன். பரிசுகளை எடுத்துட்டு போக டெம்போ கொண்டு வர சொல்லி இருக்கீங்களான்னு பிரின்சிபலே கேலி செய்தார்... smile emoticon

இரு நாட்கள் கேரளாவுக்கு கல்லூரி சுற்றுலா. முதல் ஆளாக பணம் கட்டியது நான் தான். மாஷா அல்லாஹ் என்னவரும் மாமனாரும் நீ சநதோஷமா போய் வாம்மா பிள்ளைகளை நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லி கைச்செலவுக்கு நாலாயிரம் ருபாய் பணமும் கொடுத்து என்னை அனுப்பி வெச்சாங்க. திரும்பி வந்ததும் நள்ளிரவில் வந்து அழைச்சிட்டு வந்தார் என்னவர்.

சந்தோஷமாக படித்து சந்தோஷமாக பரிட்சை எழுதி எல்லாரையும் சந்தோஷப்படுத்தும் அளவில் கல்லூரியில் முதல் மாணவியாக தேறினேன். அல்ஹம்துலில்லாஹ். கல்வியியல் வைஸ் சான்சலர் கையில் அவார்டும் பணமுடிப்பும் வாங்கிய போது நெகிழ்ந்தேன். அந்த அவார்டுக்கு சொந்தக்காரர் நானா என்னவரா சொல்லுங்கள்....

Suhaina Mazhar
 அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா
 
UMAZLA/சுமஜ்லாவின் ‘என்’ எழுத்து இகழேல் 100 கட்டுர...


 www.tajmahalmasala.in

No comments: