Friday, February 20, 2015

இன்னமும் மாறாமல் இருப்பது - M.m. அப்துல்லா

''ஏம்ப்பா அப்துல்லா!" என்று ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்டேஷனில் இருந்து குரல் குடுத்தால், "கூப்டிங்களா சார்?" என வீட்டில் இருந்தே நான் கேட்கும் தூரம் தான் ஸ்டேஷனுக்கும் என் வீட்டிற்கும்!

"6 மணி வண்டி வந்துருச்சு இன்னும் தூங்குது பார் மூதேவி"
அம்மாவின் திருப்பள்ளி எழுச்சியோடுதான் பெரும்பாலும் என் காலைப்பொழுது துவங்கும்.

"7.30 மணி வண்டி வந்துருச்சு! ஸ்கூலுக்கு இன்னுமாடா கிளம்பிக்கிட்டு இருக்க நீ?" என்ற அம்மாக்களின் ஸ்கூல் துரத்தல்.

"ஏய்! 9 மணி வண்டி வந்தாச்சு, வேலைக்கு லேட்டாச்சு. இன்னும் டிஃபன் வைக்கலயா?" என்ற அப்பாக்களின் அலுவல் அவசரம்.

"11 மணி வண்டி வந்தாச்சு! இன்னும் இந்த போஸ்ட்மேனை காணமே?" என்ற கடித எதிர்பார்ப்புகள்.

" 4.30 மணி வண்டி வந்தாச்சு!இன்னும் பசங்கள ஸ்கூல் முடிச்சு காணோமே!" என்ற அம்மாக்களின் அன்புக் கவலை.

"6 மணி வண்டி வந்திருச்சு! விளையாடுனது போதும் உள்ள வந்து படி" என்ற அக்காக்களின் அழைப்பு.

"9 மணி வண்டி வந்தாச்சு! ரொம்ப நேரம் முழிக்காம போய் காலாகாலத்துல படு" என்ற தூக்கத் துரத்தல்கள்...

இப்படி ஒரு நாளின் ஓவ்வொரு நிகழ்வும் எங்களுக்கு இரயிலோடு இணைந்து இருக்கும்.
எனக்கு சுமார் அஞ்சாறு வயசு இருக்கும் போது அம்மா ஊரில் இல்லாத ஒரு நாளில் காலை டிபன் வாங்க அப்பா என்னை தூக்கிக்கிட்டு ஸ்டேசனில் உள்ள வி.எல்.ஆர் கேண்டீனுக்குப் போனார். அப்போது ஸ்டேசனில் எப்போதும் இல்லாத பரபரப்பு! சிகப்பு கலரில் கம்பளமெல்லாம் விரித்து இருந்தார்கள்! கேட்ட போது 8.30 மணி வண்டியில கவர்னர் வர்றார்னாங்க.நான் எங்கப்பாவிடம் "கவர்னரை பாக்கணும்"ன போது சரின்னு சொல்லி நின்றார். அல்வா கடை சேட்டு போல பைஜாமாவும், தலையில் ஒரு குல்லாவும் அணிந்த ஒரு மனிதர் வண்டியில் இருந்து இறங்கி எங்களை கடக்கும் போது, "இவர் தான் கவர்னரா?" என்று அப்பாவிடம் கேட்டேன். அதை காதில் கேட்ட அந்த மனிதர் திரும்பி என் அருகில் வந்து "நான் தான் கவர்னர் ,நம்மள்கு ஷேக்ஹாண்ட் குடு" என்று கை குடுத்தார்!! அந்த எளிய அற்புதமான தலைவர் அன்றைய கவர்னர் திரு.பிரபுதாஸ் பட்வாரி. இன்றைக்கெல்லாம் கவர்னரை அவர் பொண்டாட்டி கூட பக்கத்துலேந்து பாக்க முடியிமான்னு தெரியல? தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத, பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாத அன்றைய நாள் மீண்டும் என் அன்னை தேசத்தில் என்று வரும்? அய்யய்யோ! வேற எங்கயோ டிராக் மாறி போறேன்.மீண்டும் ஸ்டேசனுக்கே வரேன்.

புதுக்கோட்டையில் எங்க வீடு இருக்கும் பகுதியில் நிறைய பள்ளி,கல்லூரி மாணவர்கள் இரவு 9 மணி சேது எக்ஸ்பிரஸ் போனவுடன் முழுப்பரிச்சை நேரத்தில் இரவெல்லாம் ஸ்டேசனில் அமர்ந்து தான் படிப்போம்.காரணம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இல்லை..அங்கு கிடைக்கும் ஒர் அமைதி. என்னுடைய ஊரில் பள்ளிப் படிப்பின் போதும் சரி பின் திருச்சியில் பி.பி.ஏ., படித்த போதும் சரி ஆண்டு இறுதித் தேர்வுகளை இரவுகளில் ஸ்டேசனில் அமர்ந்தே படித்தேன். 10 மணிக்கு மேல் ஆள் அரவமற்ற பிளாட்பாரத்தின் மேடைகளில் அமர்ந்து படித்து கல்லூரியில் ரேங்க் ஹோல்டர் ஆனதை இன்று நினைக்கும் போதும் ஒரு தனி சுகம்.(நானெல்லாம் அந்தக்காலத்துல பிளாட்பார லைட் வெளிச்சத்துல படிச்சு வந்த ஆளுன்னு சொல்லிக்க எங்கிட்ட ஹிஸ்டிரி இருக்குபா) பின்பு சென்னை சத்யபாமாவில் எம்.பி.ஏ சேர்ந்த போது அப்பா,அம்மாவைப் பிரிந்து இருப்பதைவிட ஸ்டேசனில் அமர்ந்து படிக்க முடியாமல் போனதை நினைத்து பெரிதும் கவலைப்பட்டேன்.

எண்பதுகளின் இறுதியில் தண்ணீர் பற்றாக்குறை எங்க ஊரில் தலைவிரித்து ஆடியபோது ஸ்டேஷன் அருகில் உள்ள மக்கள் ட்ரெய்னில் தான் தண்ணீர் பிடித்தார்கள். அதை மையமாக வைத்து எங்கள் ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் கந்தர்வன்" தண்ணீர்" என்று ஒரு அருமையான கதையை எழுதினார். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும் ஒர் இளம் பெண் இறங்குவதற்குள் வண்டி புறப்பட்டு விடும். ஊரார் பதறுவதை கண்ட ஸ்டேஷன் மாஸ்டர் அடுத்த ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து அந்த பெண்ணை இறக்கி அடுத்த வண்டியில் அனுப்பச் சொல்கிறார். சிறிது நேரம் கழித்து வந்த ஃபோனில் அந்த வண்டியில் அப்படி யாரும் இல்லை என்ற தகவல் வருகிறது. அந்தப்பெண் "என்ன ஆனாளோ? அடுத்து என்ன செய்வது?" என்று அறியாது ஊரார் பிளாட்பாரத்திலேயே நொந்து நிற்கின்றனர். அப்போது அந்த பெண் டிராக் வழியாகவே குடத்தை தூக்கிக்கொண்டு நடந்து வருகிறாள்.அடுத்த ஊரை அடையும் முன் சிக்னலுக்காக நின்றபோது இறங்கி டிராக் வழியாகவே நடந்து வந்ததாக சொன்ன அந்த பெண் ஸ்டேசன் மாஸ்டரிடம் "ஏன் சார் இந்த தண்ணி நல்லாருக்குனுதான நாங்க ட்ரெய்ன்ல புடிக்குறோம்? அப்புறம் ஏன் அதுல போறவுகள்லாம் பாட்டில் தண்ணிய வாங்கி வச்சுக்குட்டு போறாக?" என்று கேட்பதாக அந்த கதையை முடித்து இருப்பார்.

எங்க ஊர் ஸ்டேஷன் நான் சிறு வயதில் ஓடு போட்ட கூடமாக பார்த்ததற்கும், தற்பொழுதும் 100 சதவீதம் மாறி விட்டது. இன்னமும் மாறாமல் இருப்பது ஓரு சிறு தண்டபாளத் துண்டை சங்கிலியில் கட்டி வண்டி வரும் முன் டன்!டன்!டன்! என்று அடிப்பதுதான்!!

M.m. Abdulla

No comments: