Thursday, August 20, 2015

ஆண் என்பவன் ....

உரத்த சிந்தனை - 2

பனி உறைய மலை முகடுகளும், மழை பொழிய கார் மேகங்களும், பசி தீர்க்க கனி வகைகளும், தாகம் தீர்க்க அருவிகளும், மனம் லயிக்க மலர் தோட்டங்களும், அழகு ரசிக்க அற்புத பறவைகளும், இடம் ஒதுங்க எழில் குடில்களும், இனம் பெருக்க பெண் துணையும், அதில் பூத்த மலர் பார்த்து மனம் மகிழ்ந்து, வாழும் வாழ்வை மணமாக்க, இயற்கையாம் பேரின்ப கடவுளின் நினைப்பையும் தன் எண்ணத்தில் கொண்ட, அன்றிருந்த இன்ப நிலை, அற்புத நிலையன்றோ, ஆண்டவனும் உகந்த அழகான நிலையன்றோ?

இது நிலையில், ஆண் என்பவன், வலுவும், வேகமும், வேட்டைத் திறனும், வேட்கை தீவிரமும், பகுத்தறியும் திறனும் கொண்டவனாக இருக்கும் நிலையிலேயே புருஷ இலட்சணங்களுக்குட்பட்டவன் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆணின் கடமை, பலகீனப் பெண்ணை பாதுகாப்பதும், ஏற்றெடுத்த பெண்ணை ஏற்றமுடன் வைத்திருப்பதும்தான். வித்துக்களை விதைப்பதும், நல்முத்துக்களை அறுவடை செய்வதும், அவைகளுக்குண்டான அத்தனையையும் தன் நிலைக்கொப்ப செய்து கொடுப்பது என்பதும் ஆதாரக் கடைமை எனும் நிலையில், சார்ந்திருக்கும் உறவுகளின் தேவைக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்வது ஆணுக்கான உயர்வு நிலை. ஆண் என்பவன், பாதுகாப்பின் அடையாளம், பாதுகாப்பவன் என்கிற நிலையில், இயற்கையே வரம் கொடுத்த சற்றே ஒவ்வாத உடல் கூறுகளையும், போலி சமிக்சைகளை வெளிப்படுத்தும் திறனும் கொண்டவன் அவன், ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் அடங்காத மனசுள்ளவன், தன்னை மயங்க வைத்த மயக்கங்களை திடமாக இன்னொரு நாளில் எட்டி உதைப்பவன். உயிர் கொல்லும், பேரலைகளின் ஆழம் தெரிந்ததினால், நீந்தி கரை சேருபவன், தன்னைச் சார்ந்தவரையும், மற்றவரையும் கரை சேர்ப்பவன். அவன் பூனை நடை நடக்கும் ஒய்யாரனாய் இருக்க வேண்டுமென்பதில்லை, களைத்துப் போன ஒரு சிங்கத்தின் தளர்ந்த நடை கொண்டவானாக இருந்தாலும் போதும், அதுவே, அவன் ஆண்மையின் பேரழகை காட்டிக் கொடுத்து விடும் !

Raheemullah Mohamed Vavar

No comments: