Sunday, September 13, 2015

நான் காணும் உகாண்டா ....!


by- ராஜா வாவுபிள்ளை

ஆங்கிலேயர் சந்தித்த முதல் கபாகா.

நாடு பிடிக்கும் உக்தியோடு உகாண்டாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் கண்ட முதல் கபாகா முட்டேசா-1 என்ற புகாண்டா ராஜ வம்சத்து 30 வது கபாகா ஆவார்.

கபாகாவாக இருந்த இவரது தந்தை வைசூரி நோய்கண்டு இறந்ததும் 1856 ம் ஆண்டு முடிசூடிக் கொண்டார்.

பல வகையான முன்னேற்றங்களும் இப்போது இருக்கும் நாகரீக பகாண்டா பண்பாடு கலாசார வளர்சிகள் இவரது காலத்திலேதான் முடுக்கி விடப்பட்டது எனலாம்.

இதற்கு முந்தய கபாக்காக்கள் விலங்கினங்களிடம் இருந்தும் எதிரி நாட்டு படையெடுப்புகள் போன்றவற்றை கவனித்து வந்தார்கள் ஆனால் இவருக்கோ மண்ணாசை பிடித்த ஆங்கிலேயர்களிடம் இருந்தும் தன் நாட்டையும் வளங்களையும் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.

இவரது காலத்தில் புகாண்டா ராணுவமும் கடற் ( ஏரிப் ) படையும் விரிவுப் படுத்தப் பட்டது.
மரவுரியை ஆடையாக அணிந்திருந்த பகாண்டா மக்களுக்கு பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள சட்டம் தீட்டி அனுமதி அளித்தார்.

இதுவே கிழக்கு ஆப்ரிக்க கம்பனியின் பெரும் வியாபாரத்திற்கும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் வழிவகுத்துக் கொடுத்தது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே அரேபியர்கள் புகாண்டா நாட்டுக்கு வந்து துணிமணிகளையும் முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் துப்பாக்கிகளைகும் கொண்டுவந்து கபாக்காவிடம் பண்டமாற்று வியாபாரமாக அடிமைகளையும் யானைத் தந்தையுமே பெற்றுச் சென்றனர்.

அரபியர்களுக்கு அவர்களது மதத்தை புகுத்தவோ நாட்டை அடிமைப் படுத்தும் எண்ணமோ கிஞ்சித்தும் இருக்கவில்லை. ஹமாதி பின் இபுராஹிம் என்ற அரபு வணிகர் கபாகாவிற்கு வேண்டிய பொருட்களை மொம்பாசா துறைமுகம் வழியாக தருவித்து வாணிபம் செய்து வந்தவர்களில் முதன்மையாக திகழ்ந்தார்.

ஆங்கிலேயர்களோ முதலாவதாக மதபோதகர்களாகவே மெதுவாக வந்து கால் பதித்து விட்டதும் நாடுபிடிக்கும் ஆட்சியாளர்களையும் ராணுவத்தையும் வரவழைத்துக் கொண்டனர்.

முடேசா 1 காலத்தில் ஆங்கிலேயப் படைகளின் தளபதியாக இருந்தவர்
லேடேனன்ட் செர்கொல்ட் ஸ்மித் என்பவராவார்.
1884 ல் முட்டேசா 1 இறந்ததும் ஆடாளும் ஆசையை அடையும் நாட்கள் நெருங்கி விட்டதைக் கணித்த ஆங்கிலப் படைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு காப்டன் பிரடெரிக் லுகார்ட் தலைமை ஏற்று 70 வருட ஆங்கிலேயர்களின் சுகபோக ஆட்சிக்கும் பகாண்டா மக்களின் அடிமை வாழ்விற்கும் அடிகோலினார்.
(தொடர் 4)

பி கு : கருப்பு வெள்ளை படத்தில் கபாகா முட்டேசா 1.

வண்ணப் படத்தில் தற்போதைய கபாகாவும் அவரது பட்டத்து ராணியும்.

No comments: