Monday, November 16, 2015

ஜபருல்லாஹ்வும் தேத்தண்ணியும்


                                                     (புகைப்படம் உதவி: ஆபிதீன் )

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்வைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இவர் ஒரு புரியாத புதிர். புரிந்துக் கொள்வது கடினம் In otherwords I can say, He is a hard nut to crack

புரிந்தவர்களுக்கு இவர் ஒரு திறந்த புத்தகம். புரியாதவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனமா?… ஊஹும்.. .. இல்லை. இவர் ஒரு பெர்முடா முக்கோணம். சர்ச்சைகள் இவருக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி. பிரச்சினைகள் இவருக்கு பிரியாணி மாதிரி.

தேத்தண்ணியும் (தேயிலைத் தண்ணீர்) ஜபருல்லாஹ்வையும் போலவே,,,, “ஹாஸ்யமும், – இவரும்” ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். சாதாரண இரட்டையர்கள் அல்ல. எந்த அறுவை சிகிச்சை நிபுணராலும் பிரிக்க முடியாத Conjoined Twins.

இதுவரை நான் என்னைப் போட்டு குழப்பிக் கொண்டதில்லை. நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் இவரிடம் ஐந்தே நிமிடம் பேசிப் பார்க்கலாம். தோல்வியை ஒப்புக் கொள்வார்கள்.

அனுபவம்தான் வாழ்க்கை என்பார்கள். இவருடைய வாழ்க்கையே ஒரு அனுபவம். வாழ்க்கையை கவிதையில் தொலைத்துவிட்டு கவிதையை வாழ்க்கையில் தேடிக்கொண்டிருப்பவர் இவர்.

    சிந்திக்க வேண்டும் என
    எல்லோருமே சொல்லுகிறார்கள்.
    எதைப்பற்றி சிந்திப்பது என்பதே
    என் ஒரே சிந்தனையாக உள்ளது

என்று இந்த ‘பக்கவாட்டு சிந்தனையாளர்’ நம்மிடமே கேள்விகேட்டு நம்மையே பாடாய்ப் படுத்துகிறார்.

இவர் எவ்வளவோ கவிதைகள் எழுதி விட்டார். எத்தனையோ பிரபலங்களுடன் பழகிவிட்டார். ஏராளமான மேடைகளில் சொற்பொழிவாற்றி விட்டார். இன்னும் அவருக்கு வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியவில்லையாம். இவர் எப்போது அதை முழுசாக புரிந்துக் கொள்வது? எப்போது அதை எதிர்க்கொண்டு வெற்றி வாகை சூடுவது?

    மனைவி புரிகிறது..!
    மக்கள் புரிகிறது…!
    சொந்தம் புரிகிறது…!
    வாழ்க்கைதான் –
    புரியவில்லை..!

இதைப் பார்த்து விட்டு எனக்கும் இவர்மீது ஒரு கவிதை எழுதத் தோன்றியது.

    ஜபருல்லாஹ்வின் ..
    கவிதை புரிகிறது…!
    ஜபருல்லாஹ்வின்…
    வியாக்யானம் புரிகிறது…!
    ஆனால்.. ஜபருல்லாஹ்தான்
    புரியவேயில்லை…!

“புரியவில்லை” என்று இவரிடம் சென்று நான் கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர் என்னை புத்திசாலி என்று புகழக்கூடும். ஆமாம். அதற்கும் ஒரு கவிதை இவரிடம் கையிருப்பில் உண்டு.

    அறியவில்லை என
    அறிந்தாலே அவன்
    அறிஞன்தான்…!

    புரியவில்லை என
    புரிந்தாலே அவன்
    புத்திசாலி தான்…!

என்கிறார் கவிஞர். எல்லா நோய்க்கும் கைவசம் மருந்து வைத்திருக்கும் யுனானி மருத்துவர் டாக்டர் செய்யது சத்தார் போல, கவிஞர் ஜபருல்லாஹ்வும் நமது எல்லா கேள்விகளுக்கும் கவிதையையே பதிலாக வைத்திருப்பார்.

கவிதை என்றால் என்ன? நாம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

“Poetry is when an emotion has found its thought and the thought has found words” என்பான் ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற ஆங்கிலக் கவி.

“Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility” என்று வருணிப்பான் வில்லியம் வோர்ட்ஸ்வர்த்.

    உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
    உருவெடுப்பது கவிதை
    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
    தெரிந்துரைப்பது கவிதை

என்று கவிதைக்கு விளக்கம் தருகிறார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.

கவிஞர் ஜபருல்லாஹ் கவிதைக்கு தரும் விளக்கத்தில் ஒரு ஆன்மீகச் சாயம் பூசுகிறார். இஸ்லாத்தில் கவிதையே கூடாது என்று வாதிடும் சிலருக்கு இவர் வில்லனாகத் தெரிவது 100% உறுதி. கவிதைக்கு இவர் தரும் விளக்கம் இதோ :

    இது –
    சிந்தனையின் ‘ருக்ஊ’
    வார்த்தைகளின் ‘ஸ்ஜ்தா’
    ஞானத்தின் ‘தியானம்’
    மொத்தத்தில் ஆன்மாவின் ‘ஆலிங்கனம்’

இவருடைய பார்வையில் கவிதை என்பதே ஒருவிதமான ‘இபாதத்’ (இறை வணக்கம்).

    தியானம் செய்..
    என்றார் குரு.
    நான்தான்
    கவிதை எழுதுகிறேனே என்றேன்
    சினந்தார்.
    எனக்கு
    தியானம் புரிந்த அளவுக்கு
    அவருக்கு – (என் குருவுக்கு)
    கவிதை புரியவில்லை

பார்வைகள் பலவிதம். ஒவ்வொரு மனிதனின் பார்வையில்தான் எத்தனை எத்தனை கோணங்கள்? கவிதையை ஒரு தியானமாக பார்க்கின்ற மனப்பக்குவம் நம் கவிஞருக்கு இருக்கிறது.

“ஜபருல்லாஹ் கவிதை எழுதி என்னத்த பெருசா சாதிச்சுட்டாஹா?” என்று கேட்கிறீர்களா? அதுவும் நல்ல கேள்விதான். வாங்க அவரிடமே இதைக் கேட்போம்.

    என் கவிதை
    சாதனை செய்ததில்லை…
    சோகத்திலிருந்து சுகத்துக்கு
    எவரையும் இட்டுச் சென்றதில்லை…

    எந்தத்
    தேடலையும் நோக்கி
    பயணித்ததில்லை…

    எந்த
    விடியல் வெள்ளியையும்
    தரிசித்ததில்லை..
    வழிகாட்டியதும் இல்லை.
    கெடுத்ததும் இல்லை.
    வென்றதும் இல்லை.
    தோற்றதும் இல்லை.

    பின் என்னதான் செய்தது..?
    என்கிறீர்களா…?

    என் –
    கவிதையிடம்தான் நீங்கள்
    கேட்க வேண்டும்..!

ஏன்தான் இந்த மனிதரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்றாகி விடுகிறது. இவருடைய கவிதையிடம்தான் நாம் போய் கேட்க வேண்டுமாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி போ. நடக்கின்ற காரியமா இது?

“எமக்குத் தொழில் கவிதை” என்று மீசையை முறுக்கினான் பாரதி. கவிதை சோறு போடுமா..? எல்லோரும் வைரமுத்து போல பந்தாவாக செட்டிலாகி விட முடியுமா..?

    இறைவா..!
    என்னிடம் ஒருவர்
    என்ன செய்கிறீர்கள் என்றார்.
    கவிதை எழுதுகிறேன் என்றேன்
    “அது சரி.. சோற்றுக்கு?” என்றார்.
    அல்லாஹ் தருகிறான் என்றேன்.
    சிரித்தார்….
    உன்னை – எனக்கு காட்டியதைப்போல்
    இவர் போன்ற ஆட்களுக்கு நீ
    காட்டவில்லையா…?

என்று பாடுகிறார் நம் கவிஞர். கேள்வி கேட்ட அவரைப் பார்க்க இவருக்கு பாவமாக இருக்கிறது.. இவரைப் பார்க்க அவருக்கு பாவமாக இருக்கிறது. இவருடைய கவிதையை படிக்கும் நம்மை பார்க்க சிலருக்கு பாவமாக இருக்கிறது. உலகம் உருண்டை என்று சொன்ன கலீலியோ உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்.

கவிதை எல்லோராலும் எழுத முடியும். ஆனால் சிலருடைய எழுத்து மட்டும் காவியமாகி விடுகிறது. நெஞ்சத்தை கிள்ளுகிறது. உள்ளத்தை அள்ளுகிறது. பிசைகிறது; உருக்குகிறது; கரைக்கிறது; நெருடுகிறது; பாதிக்கிறது; பதைபதைக்க வைக்கிறது; இன்னும் என்னன்னமோ செய்கிறது. அந்த கவிதைக் கலையை கசடறக் கற்று வைத்திருப்பவர் கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்.

இவருடைய கவிதை வரிகளில் வார்த்தை ஜாலம், பண்டிட் பிர்ஜு மஹாராஜ் போன்று சலங்கை கட்டிக் கொண்டு வந்து அமர்க்களமாய் ஆடும். படித்து முடித்த பின்னரும் கூட அந்த சலங்கை சப்தம் நம் மனதில் அடங்க சற்று நேரமாகும்.

    என் விஷயத்தில்
    நினைத்ததெல்லாம்
    நடந்து விடுகிறது..!
    நான்
    நினைப்பதைத் தவிர.

என்று கவிஞர் கூறுகையில் நமக்கு இவர் மீது ஓர் அபரிதமான இரக்கம் ஆட்கொள்கிறது. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்று “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தில் கவிஞர் கண்ணதாசன் புனைந்த வரிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.

தூங்க வேண்டிய நேரத்தில் முழித்திருந்து, முழிக்க வேண்டிய நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் வித்தியாசமான மனிதர் நம் கவிஞர் என்பதே முன்னரே பார்த்தோம். உலகம் அவரைப் பற்றி என்ன புறம் பேசும் என்ற கவலை இவருக்கில்லை. இவர் மனதில் பட்ட கருத்துக்களை முகத்துக்கு நேரே சொல்லி விடுவார். எத்தனையோ நண்பர்களை அவர் இதனால் இழந்ததுண்டு. “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்று இவரை வருணிப்பதும் இதனால்தான்.

    எனக்குப் புரியவில்லை
    புரியவில்லை என்பதே ரொம்ப நாட்கள்
    புரியவில்லை.
    இந்நிலையில் –
    புரிந்தவர்கள்
    என்னை –
    எப்படிப் புரிந்திருப்பார்கள்..?
    புரியவில்லை..!

என்கிறார். இவரைப்பற்றி மற்றவர்கள் என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள் என்பது இவருக்கே நன்றாக புரிகிறது, ஆனாலும் இவர் அப்படித்தான்.

சிலநேரம் வாழ்க்கையின் எதார்த்தத்தை இவர் புரிந்துக் கொண்டது போல் தெரிகிறது. சிலசமயம் வாழ்க்கையின் எதார்த்தத்தை இவர் புரிந்துக் கொள்ளாததுபோல் தெரிகிறது. இதனால் தான் “இவர் ஒரு புரியாத புதிர்” என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன்.

கவிஞருக்கு தான் வாழ்கின்ற எளிமையான வாழ்க்கையே பிடித்து விட்டது போலும். ஆடம்பரமான பகட்டு வாழ்க்கையில் அவருக்கு நம்பிக்கையில்லை.

    இருட்டுக்குள்
    என்னால் –
    பார்க்க முடிகிறது..!
    வெளிச்சத்தில்தான்
    நான்
    குருடாகி விடுகிறேன்..

இவ்வரிகளுக்கு நாம் பல கோணங்களில் அர்த்தங்கள் கற்பிக்க இயலும். இருப்பதே போதும் என்று நினைப்பவர் இவர்.  கஷ்டங்கள் இவருக்கு பழகிப் போனது மட்டுமல்லாமல் பிடித்தும் போகிறது. அதுதான் விந்தையிலும் விந்தை.

    பிரச்சினைக்குள் என்னால்
    வாழ முடிகிறது…!
    கவலையற்ற நிலையில்தான் – நான்
    மரணித்து விடுகிறேன்

என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.

எல்லோரும் வாய்ப்புகளைத் தேடிப் போகிறார்கள். கவிஞரிடம் உள்ள சேதார எண்ணமே வாய்ப்புக்கள் தன் வீடு தேடி வருமென்று வழிமீது விழிவைத்து காத்துக் கிடக்கும் அனுகூலமற்ற குணநலம்தான்.

    வேண்டியது..
    எனக்கொரு நிலா முற்றம்..!
    முற்றம் இருக்கிறது..
    நிலாவுக்கு என்னசெய்வது..?
    வந்தால்தானே…!

என்பது இவரது சித்தாந்தம். முற்றத்தையும் மூடிவைத்துவிட்டு, ஜன்னலையும் திறக்காவிட்டால், நிலா எப்படி முற்றத்திற்கு வரும்?

எனக்கு ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வந்தது ஒருவன் கடவுளிடம் வரம் வேண்டி கடுமையான தவம் மேற்கொண்டானாம். “தனக்கு அதிர்ஷ்டக் குலுக்கலில் ஒரு கோடி ரூபாய் விழ வேண்டும்” என்று மன்றாடினாம். அவன் தவத்தை ஏற்று “அடுத்த மாதத்தில் உனக்கு ஒரு கோடி ரூபாய் குலுக்கலில் விழும்” என்று வரம் தந்துவிட்டு போய் விட்டார் கடவுள்.

அடுத்த மாதமும் வந்தது குலுக்கலில் இவனுக்கு பரிசு விழவில்லை. வேறு யாருக்கோ விழுந்திருந்தது. இவனுக்கோ கடவுள் மீது பயங்கர கோபம். கடவுள் பொய்சொல்லிவிட்டாரே என்று. ஒருநாள் கடவுள் இவன்முன் மறுபடியும் தோன்றியபோது இவன் கேட்டே விட்டேன். “உன்னிடம் தவமிருந்து வரம் பெற்றது Totally Waste” என்றான்.

கடவுள் பொறுமையாக பதில் சொன்னார். “உனக்கு அடுத்த மாதம் குலுக்கலில் ஒரு கோடி ரூபாய் விழுமென்று உனக்காக ஏற்கனவே ரிசர்வ் செய்து வைத்திருந்தேன். நீ ஒரு ரூபாய் கொடுத்து லாட்டரி டிக்கட் வாங்கி வைத்திருந்தாயா? என்று கேட்டார். “இல்லையே..!” என்று இவன் உதட்டைப் பிதுக்கினானாம்.

வாய்ப்புக்கள் வரும்போது நாமும் அதை நழுவவிடாமல் அதற்கு அடிப்படையான ஆயத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் வாழ்க்கையின் தத்துவம்.

சில வாரங்களுக்கு முன் கவிஞர் ஜபருல்லாஹ்வைக் கண்டு உரையாடிக் கொண்டிருந்தபோது என்னையும் அறியாமல் ஒரு சோகம் என்னை அப்பிக் கொண்டது.

அவருக்கு ஆறுதலாக ஏதாவது வார்த்தைகள் நான் கூறினால் எங்கே என்னைப் பார்த்து சிரிப்பாரோ என்ற பயம்.அப்படியே அவர் சிரித்தாலும் அவரை நான் அடிக்கின்ற அளவுக்கு கல்மனது படைத்தவன் நானில்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் இப்படி கூறுகிறேன் என்று கேட்கிறீர்களா? அவரே எழுதியிருக்காரே..?

    ஆளாளுக்கு
    ஆறுதல் சொல்கிறார்கள்..
    எதை இழந்தேன் என்றே
    எனக்கு மட்டுப்படவில்லை..!
    அவர்களைப் பார்த்தால்தான்
    பரிதாபமாக இருக்கிறது..!
    சிரித்தால்….
    அடிப்பார்களோ..!

தேத்தண்ணியும் தீந்தமிழும் இவருக்கு இரு கண்கள். “இவையிரண்டிலும் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்..?” என்று கேள்வி கேட்டால் இவரே குழம்பி விடுவார். இப்போது இவருக்கு தேத்தண்ணியே பிரதான ஆகாரமாகி விட்டது. ஜீரண சக்தி குறைந்து விட்டது எனலாம்.

“பல்லு போனால் சொல்லு போகும்” என்பார்கள். கவிஞர் ஜபருல்லாஹ்வுக்கு பல்லு போன பிறகு “தேவர்மகனில்” ரேவதி பாடுவதைப்போல் வெறும் காத்துதான் வருகிறது. எனது ஆருயிர் நண்பர் நாகூர் ரூமி அவரை பல்மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போய் பல்கட்டலாமே என்று முயற்சிகள் எடுத்தபோது கூட  அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

ஆனாலும் மனிதர், எப்போதும்போலவே இப்போதும் நிறைய பேசுகிறார். சந்தோஷமாக அளவளாவுகிறார். நம்முடன் சிரித்து மகிழ்கிறார். நாமும் அவருடன் அமர்ந்து தலையாட்டுகிறோம். புரிந்ததுபோல் நடிக்கிறோம். அதேசமயம் இதுவரை அவர் நம்முடன் என்ன பேசினார் என்று ஏதும் புரியாமல் “கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப்போல்”  ‘பெக்கே பெக்கே’ என்று  முழிக்கிறோம்.

இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். முதுமை என்னும் கிடுக்கிப்பிடி நமக்கும் விழுகையில் நம்முடைய பேச்சும், நடையும் எப்படி உருமாறும் என்று யாராலும் ஊகிக்க முடியாது. அறிவுஜீவியாக நான் கருதும் இந்த அற்புத மனிதருக்கு ஆண்டவன் நீடித்த ஆயுளைத் தரவேண்டும்.


அப்துல் கையூம்
https://nagoori.wordpress.com/

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அண்ணன் அவர்கள் பல்லாண்டு வாழ்க!
அல்லாஹ் அருள் புரிக!
ஆமீன்!