Thursday, November 5, 2015

கடைக்காரர் என்னைப் பார்த்து சிரிக்க நானும் சிரித்துவிட்டு கிளம்பி விட்டேன்.

குடும்ப உறவினரான டாக்டரை வழக்கம்போல் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன்.
அப்படியே பிரஷரையும் செக் பண்ணி பார்த்ததில் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. மாத்திரை எழுதித் தருகிறேன் ... சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு
பல விஷயங்களை என்னோடு பேச ஆரம்பித்தார்.

மாட்டுக்கறி விவகாரத்தில் மோடி அரசும் காவிகளும் நடந்துகொள்ளும் கேவலமான நடவடிக்கைகளை அவருக்கு விவரித்தேன். எழுத்தாளர்களை திட்டமிட்டு கொள்வதையும் மிரட்டுவதையும் சொன்னேன்.
ஷாருக்கானை கூட விட்டு வைக்காமல் அவரையும் பாகிஸ்தான் ஏஜெண்டு என்று விமர்சிப்பதையும் சொன்னேன். டாக்டர் ஆச்சரியப்பட்டார்.

சரி ... மத்தியில் அப்படிஎன்றால் மாநிலத்தில் அதைவிட மோசமாக இருக்கிறது. டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப் பாடிய கோவன் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. இது என்ன கொடுமை ?
கருத்து சுதந்திரம் இங்கே சுத்தமாக இல்லை என்றேன்.

டாக்டர் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த டிவி சேனல்களின் அயோக்கியத்தனத்தையும் அவருக்கு விலாவாரியாகச் சொன்னேன்.
ஊடகங்களே மக்களை வழிகெடுத்து தவறான சிந்தனைகளை விதைப்பதை சொல்லி வருத்தப் பட்டேன்.

ஆயிரம் கோடிக்கு யாரோ தியேட்டர் வாங்கி இருக்காங்களாமே என்று டாக்டர் கேட்டார்.
ஆமா... இந்த லேடிங்க சென்னையில் யாரையோ மிரட்டி ஆயிரத்துக்கும் மேலான கோடி மதிப்புள்ள சொத்துக்களை மிரட்டி வாங்கி இருக்காங்க என்று விளக்கிச் சொன்னேன்.
அப்புறம் பேஸ்புக்கெல்லாம் எப்படி போகுது என்று கேட்டார்.
ஒரே மாட்டுப் பிரச்சினையும்
காவிப் பிரசினையுமாத்தான் இருக்கு.
நம்மாளுங்க உட்பட எல்லோருமே கவியைப் பற்றித்தான் பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க.
காவியைத்தவிர வேறு எதையுமே முக நூல்ல பார்க்க முடியல.
முக நூலும் காவிமயமாத்தான் இருக்கு என்றேன்.
டாக்டர் வாய் விட்டு சிரிச்சார்.

அப்புறம் பிரஷர் மாத்திரையை எழுதித் தந்தார்.
பேப்பரை வாங்கிக் கொண்டு வழக்கமாக மருந்து வாங்கும் கடைக்காரரிடம் கொடுத்தேன் .
அவர் பார்த்துவிட்டு ...
அண்ணே இந்த மருந்து புதுசா இருக்கு . நம்மகிட்ட இல்லேன்னார்.
அப்படி என்ன புது மாத்திரை எழுதி இருக்காருன்னு பேப்பரை வாங்கிப் பார்த்தேன்.
நம்ம டாக்டர் தமிழில் எழுதி இருக்காரு.
ஆச்சரியத்தோட படிச்சுப் பார்த்தேன்.

* ஒரு மாதம் டிவி விவாதங்களை பார்க்கக் கூடாது.
* பேஸ்புக் பார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்..
* ஆடோ மாடோ கோழியோ என்ன வேண்டுமானாலும்
சாப்பிடலாம் .. பிரச்சினை இல்லை.
* எண்ணெயில் பொறித்த பலகாரங்கள் பஜ்ஜி வடை வகைகள் எவ்வளவு வேண்டுமானாலும்
பயமில்லாமல் சாப்பிடலாம். ஒன்னும் செய்யாது .
* கல்யாண வீடுகளில் பிரியாணி திங்க பயப்பட வேண்டாம். அது உடம்புக்கு நல்லது.
* முக்கியமாக ...
பேப்பர் படிப்பதையும் டிவி செய்தி கேட்பதையும்
உடனே நிறுத்த வேண்டும்.

கடைக்காரர் என்னைப் பார்த்து சிரிக்க நானும் சிரித்துவிட்டு கிளம்பி விட்டேன்.
 
Abu Haashima

No comments: