Tuesday, February 23, 2016

குழம்பு - ஆணம் - சால்னா

தஞ்சாவூர் முஸ்லிம் வீடுகள் பலவற்றிலும் குழம்பு என்று சொல்லமாட்டார்கள். ஆணம் என்றுதான் சொல்வார்கள்.

பருப்பாணம் - சாம்பார்
புளியாணம் - ரசம்
மீனாணம் - மீன் குழம்பு
கறியாணம் - கறிக்குழம்பு

ஆணம் என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் முஸ்லிம் வீடுகளில் இப்படியான பல பழந்தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.


குழம்பு என்பது பெரும்பாலும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மூலிகைகளை அறைத்துக் கலக்கிக் குழம்பாக்கி புண்களில் இடுவார்கள்.

அகத்தியர்குழம்பு என்றால் ஒருவகை பேதிமருந்து. இளநீர்க்குழம்பு என்றால் இளநீரால் செய்யப்படும் கண்மருந்து. இப்படியாய் ஏகப்பட்ட குழம்புகள் தமிழ் மருத்துவத்தில் உண்டு.

மட்டுமல்லாமல் குழம்பு என்பதற்கு குழம்பிப்போதல் பைத்தியமாதல் என்ற பொருளே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. குழம்பிவிட்டான். குட்டையைக் குழப்பாதே. குழப்பக்காரன்.

ஆணம் என்றால் என்னடா என்று ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த நண்பன் கேட்டான். நீ குழம்பாதே அது குழம்பு என்று சொன்னேன்
wink emoticon

சால்னா என்று உருது நண்பர்களைக் கொண்ட சில முஸ்லிம்கள் ஆணத்தைக் கூறுவார்கள்.

இந்த ஆணம் என்ற சொல்லைவிட பசியாறு, பசியாறிட்டு, பசியாத்தல், பசியாத்தலை என்ற பழக்கம்தான் வெகு சிறப்பு.

காலை உணவை வெள்ளைக்காரன் Break Fast என்பான். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு உண்ணும் காலை உணவுக்கு அதுதான் சரியான பெயர்.

ஆனால் நாம் காலை சாப்பாடு சாப்பிட்டாச்சா? மதிய உணவு முடிச்சாச்சா, இரவு சாப்பாடு சாப்பிட்டாச்சா என்றுதான் கேட்கிறோம்.

காலை உணவுக்கு பசியாறல் என்பதுதான் சரி. காலப் பசியாறல முடிச்சுட்டு போங்கம்மா என்று முஸ்லிம்வீடுகளின் அன்பாகச் சொல்வார்கள்.

இதுபோல் முஸ்லிம் வீடுகளில் புழக்கத்தில் உள்ள சொற்களைத் தொகுக்க எனக்கு ஆசை. உங்களிடம் உள்ள சொற்களைப் பகிருங்களேன்!
அன்புடன் புகாரி


கவிஞர் புகாரி

No comments: