Saturday, February 13, 2016

" இது காதல் மாதம்" -புதுகை அப்துல்லா


எதனால்
என்னைக் காதலிக்கிறாய்
என்றாய்?
அதைச் சொல்லத் தெரிந்து
இருந்தால்
நிச்சயம் உன்னை
காதலித்திருக்க மாட்டேன்!
‪#‎இது_காதல்_மாதம்‬

ஒரு சராசரி தினத்தின்
மாலை நேரம்..
வழக்கமான சந்திப்பில்
வழக்கம் போல் இல்லை நீ!
காரணம் கேட்டவனிடம்
கொட்டித் தீர்க்கிறாய்..
அனைத்தையும் கேட்டுவிட்டு
ஆறுதலாய் காதலையே
மீண்டும் அளிக்கிறேன் நான்!!

‪#‎இது_காதல்_மாதம்‬



உணராத சுவாசித்தல் போல
உறவாடுகிறது
நமக்கிடையிலான நேசம்.
உன்னை உணரத் துவங்கிய
நொடியில் நானும்..
என்னை உணரத் துவங்கிய
நொடியில் நீயும்..
புதிதாய் உணர்வோடு சுவாசித்தோம்.
‪#‎இது_காதல்_மாதம்‬

எத்தனை நாள் காத்திருந்தேன்
தெரியுமா என் காதலைச்
சொல்ல?
பார்த்த பொழுது சொல்ல
நினைத்து
பழகிய சந்தர்ப்பங்களிலும்
இயலாது..
தயங்கித் தயங்கி எதையோ பேசிக்கொண்டிருந்த
தருணத்தில்
உனக்கான காதலை
சொல்லத் துவங்குகிறாய் நீ.
நமக்கான வாழ்வை துவங்குறேன்
நான்..!!
‪#‎இது_காதல்_மாதம்‬

எதைச் சொன்னாலும்
நீ "வாவ்" என்கிறாய்.
நான் கஞ்சன்..
ஒரு எழுத்து குறைத்து
"வா" என்றே சொல்கிறேன்.
-----
பார்க்க வேண்டும்
வருவாயா? என்றாய்.
வந்தேன்..
வந்தாய்..
பார்த்த தருணத்தில்
இடம் மாறியதில்
இருவரும்
தொலைந்துபோனோம்.
‪#‎இது_காதல்_மாதம்‬

எப்போதும் போலில்லை
அவள் பேச்சு.
கேள்விக்கான பதில் தவிர்த்து
வார்த்தைகளில்லை அவளிடம்.
என்னாச்சு கண்ணம்மா? என்றவனிடம்
வார்த்தைகளின்றி
மொத்தமும் கொட்டித் தீர்த்தாள்..
துயரங்களையும் கூடவே காதலையும்!
‪#‎இது_காதல்_மாதம்‬

பரஸ்பரம் சொல்லிக் கொண்ட
ஐ லவ் யூ விற்குப் பிறகான
ஒரு நாளில் வெளியூர் பயணம்.
பயணம் துவங்கியதில் இருந்து
சென்று சேரும் வரை
தொடர்ந்தது எங்கள் அலை பேச்சு!
பேச்சின் முடிவில் சொன்ன
ஐ லவ் யூ எங்களின்
முதல் ஐ லவ் யூ ஆனது!!
‪#‎இது_காதல்_மாதம்‬

அதிசயமாக அன்று
நான் காத்திருக்க நேரிட்டது!
ஒவ்வொரு காத்திருத்தலுக்கும்
பின்னான அவளது வலியை உணர்ந்தவனானேன்.
வந்த நொடியில்
மன்னிப்புக் கோரினேன்.
யுகம் யுகமாய்
காத்திருந்த கதையை
மெளனத் தலையசைவில்
புரிய வைத்தாள்!!
‪#‎இது_காதல்_மாதம்‬

உறங்காத பொழுதுகள்
உன்னுடையது என்றாள்.
உன்னையும், பொழுதுகளையும்
பிரித்தறிந்து பழக்கமில்லை
என்றேன் நான்!
‪#‎இது_காதல்_மாதம்‬
-புதுகை அப்துல்லா  M.m. Abdulla

No comments: