Tuesday, March 15, 2016

நினைத்துப் பார்க்கிறேன்

- Vavar F Habibullah

 1980 களின் துவக்கத்தில்....
எம்ஜிஆர் ஆட்சி தமிழகத்தில் முதன்முறையாக அமைந்த நேரம். அவரது முதல் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர், எம்ஜிஆரின் வலதுகரமாக திகழ்ந்த திருச்சியார் என்ற திருச்சி ஆர்.சவுந்தரராஜன்.பின்னாளில் எம்ஜிஆரின் கனவுத் திட்டமான குழந்தைகள் சத்துணவுத்திட்டத்துறை இலாகாவும் - இவர் பொறுப்பின் கீழ் வந்தது.

எம்ஜிஆர் தலைவராகவும், திருச்சியார் துணைத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றனர்.
ஜெயலலிதா, தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன், விஜயா ஸ்டுடியோ அதிபர் நாகி ரெட்டி, லடசுமி மில்ஸ் அதிபர் தேவராஜுலு,
பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் ஜி. வரதராஜுலு எம்.பி, மேலும் குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில் என்னையும், குழந்தைகள் சத்துணவுத்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்தார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் இந்த கருத்தரங்கில் சில நேரங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்களும் கலந்து கொள்வதுண்டு.


மாவட்ட கலக்டர்களும், உயர்மட்டக் குழு உறுப்பினர்களும் மாநிலத்தின் எல்லா சத்துணவு மையங்களையும் அடிக்கடி பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று, எம்ஜிஆர் கேட்டுக் கொண் டார்.சத்துணவு திட்டத்தின் உயர் அதிகாரியாக, அந்த நாட்களில் செயல்பட்டவர் - இன்றைய தமிழக அரசின் அரசியல் ஆலோசகராக செயல்படும் மூத்த ஐ.எ.எஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன்.

குழந்தைகளுக்கான சத்துணவுத்திட்டம் என்பதால் எனக்கு இந்த திட்டத்தின் மீது அந்நாட்களில் அதிக ஈ்டுபாடு இருந்தது. மாநிலம் முழுவதையும் சுற்றிப் பார்த்து இந்த திட்டத் தின் செயல்பாடுகள் பற்றி அறிய நான் மிகவும் விருப்பம் கொண்டேன்.


இதற்காகவே என் நண்பர், தொழிலதிபர் நீல கண்ட நாயரிடம் இருந்து ஒரு பிளைமவுத் காரை விலைக்கு வாங்கினேன். அந்த நாட்களில் அம்பாசடர், பியட், ஹெரால்ட் கார்களைத் தவிர இன்று போல் வேறு நவீன மாடல் கார்கள் கிடையாது. பி4 என்ஜின், ஏசி, டின்டட் கிளாஸ், கோயா சீட் சகிதம் மேம்படுத்தப்பட்ட எனது பிளைமத் கார், எனது நீண்ட தூர பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாநிலம் முழுவதையும் பலமுறை சுற்ற வருவதற்கு, இந்த கார் எனக்கு மிகவும் பயன்பட்டது.

அமைச்சர் திருச்சியார், எனது நெருங்கிய நண்பர். சில பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது எனது காரில் சில நேரங்களில், அவரை நான் அழைத்துச் செல்வதுண்டு. இந்த கார் அவருக்கு மிகவும் பிடித்து போயிருந்தது.

ஒருமுறை, நாகர்கோவிலுக்கு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவரது அரசு கார் பழுதாகி விடவே எனது காரை நான் கொடுத்து உதவினேன். நிகழ்ச்சி முடிந்த பின் எனது காரிலேயே திருச்சிக்கு சென்று விட்டார். 2-3 நாட்கள், அந்த காரை பயன் படுத்திக் கொள்ள அநுமதி கேட்டார். நானும் சம்மதித்தேன்.

ஆனால் அடுத்த நாளே, கார் என் வீட்டு போர்டிகோவில் வந்து நின்றது. உறங்கிக் கொண்டிருந்த என்னை, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று நினைத்த அவரது டிரைவர், கார் சாவியை எனது வாட்ச்மேனிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். காலையில் எழுந்ததும் காரணம் புரியாமல் விழித்த நான், அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அமைச்சா் சொன்னார்...
'அமைச்சர், படகுக் காரில் பயணம் செய்தது உளவுத்துறை அதிகாரிகள் மூலம் எம்ஜிஆர் கவனத்துக்கு போய் விட்டது. தலைவர் போனில் கேட்டார். காரை உடனே உங்களிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினார். அதனால் தான் அனுப்பி வைத்தேன்.'

எம்ஜிஆரின், முதல் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன. அதிகாரிகளைப் பார்த்து, அமைச்சர்கள் நடுங்கிய காலம்.
டிஜிபி மோகன்தாஸ், அன்றைய தலைமைச் செயலர், எனது நண்பர் டிவி ஆண்டனி போன்றவர்கள் அதிகாரிகளின் தனித்தன்மைக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கினார்கள்.
அந்த நாட்களில், அதிகாரிகளின் வருகைக்காக அமைச்சர்கள் காத்திருந்தார்கள். அதிகாரிகளை அமைச்சர்கள் சென்று சந்திக்கும் நிலை இருந்தது.

ஆனால், இன்று மூத்த அதிகாரிகள் கூட அமைச்சர்களின் கார் கதவுகளை திறந்து விடும் அவல நிலைக்கு தாழ்ந்து போய் விட்டனர் என்பதை பார்க்கும்போது அதிகாரிகள் மீது பரிதாபமே ஏற்படுகிறது.


  Vavar F Habibullah

No comments: