Saturday, August 20, 2016

அந்த 43 ஆண்டுகள்


Vavar F Habibullah
எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த கால கட்டம்...
இளம் வயது, திருமணம் பற்றி எண்ணாத வயது. பெற்றோரின் மூத்த மகன் என்பதாலும், நான் தவிர்த்து, மீதமுள்ள
குடும்ப வாரிசுகள் ஐந்து பேருமே ஆண் மக்கள் என்பதாலும், ஒரு மகள் இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்யவும், என் பெற்றோர் நான் படிக்கும் கால கட்டத்திலேயே எனக்கு திருமணம் பேசி, அதை மிகவும் விமரிசையாக நடத்தி மகிழ்ந்தனர்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் - என்னைப் பொருத்த வரையில் அதை 'இறைவன் அருள்' என்றே சொல்ல வேண்டும்.
என் இல்லத்தரசியாக இருந்து - அன்பான, அறிவான, பண்பான, பாசமான குழந்தை செல்வங்களை எனக்கு வாரிசாக பெற்றுத் தந்த என் குழந்தைகளின் பாசத்திற்குரிய தாயை, நான் வாழ்க்கைத் துணையாக அடைந்து இன்றுடன் நாற்பத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

மகாத்மா காந்தி ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தன் மனைவியுடன் வருகை புரிந்தார்.அவரது மனைவி, அவர் குடும்ப மரபுப்படி தலையில் முழு முக்காடு அணிந்து வந்ததால், சற்று வயதானவர் போல் தோற்றம் அளித்தார்.
காந்தியை அவையினருக்கு அறிமுகம் செய்தவர், அவரது மனைவியாரை காந்தியின் அன்னை என்று அறிமுகம் செய்தார். அதை தவறாக எண்ணாத காந்திஜி சொன்னார்.
"நீங்கள் சொன்னது சரி தான்...இந்த வயதில் என் மனைவியும் என்னை ஒரு தாய் போல்
கண் துஞ்சாமல் நேசித்து பாதுகாத்து வருகிறார்.அதே நேரம் ஒரு மனைவியாகவும் இருந்து கணவருக்கான பணிவிடைகளையும் பொறுப்போடு செய்து வருகிறார்.
எனது தாயார் அவர், என்று நீங்கள் அறிமுகம் செய்து வைத்ததில் எந்த விதமான தவறுதலும் இல்லை."
காந்திஜி பெருந்தன்மையுடன், சற்று பெருமிதத்துடன் தன் மனைவி பற்றி கூறிய உயர்ந்த வார்த்தைகள், கூட்டத்தினரிடம் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
வயது ஆக - ஆக, முதியவர்களும் குழந்தைகள் போல் மாறி விடுகின்றனர்.வயதான குழந்தையான என்னை, தினமும் இன்முகத்துடன் உபசரித்து, ஒரு தாய் போல் இருந்து அரவணைத்து, பேணி பாதுகாக்கும் அன்பு துணைவியாக என் மனைவி இப்போதும் திகழ்கிறார் என்பதே நான் பெற்ற
நற்பாக்கியம் ஆகும்.
என்னோடு இத்துணை ஆண்டு காலம் நல் வாழ்க்கைப் பயணம் தொடரும் அவருக்கு
இந்நன்னாளில் என் இதயப் பூர்வமான நன்றி அறிதலை மனம் திறந்து வெளிப்படுத்துவதில் நான் மிகவும் அக மகிழ்கிறேன்; பேருவகை கொள்கிறேன்; பெருமிதம் அடைகிறேன்.

Vavar F Habibullah

No comments: