Saturday, September 3, 2016

பத்துப் பதினைந்து நிமிட ஆற்றொழுக்கான உரை,


நிஷா மன்சூர்
பத்துப் பதினைந்து நிமிட ஆற்றொழுக்கான உரை,மூன்று முக்கிய அம்சங்களை கருவாக எடுத்துக்கொண்டு அவற்றை எளிமையாக விளக்கி அவற்றையும் விழாவையும் தொடர்பு படுத்தி உலகம் வாழ்க்கை,ஞானம்,உடல்நலம் சார்ந்த மேற்கோள்களை ஆங்காங்கே ஹைலைட் செய்து இடையில் இரண்டு குட்டிக்கதைகள் சொல்லிப் பேச்சை முடித்தபோது கூடியிருந்தவர்களின் கைதட்டல் ஓய ஒருநிமிடமாயிற்று.பேச்சுக்கிடையில் இரண்டு முறை மக்கள் உரக்கச் சிரித்திருந்தனர் மூன்று முறை கைதட்டியிருந்தனர்.
அமர முற்படுகையில் விழாத் தலைவர்"அருமையாப் பேசினீங்க அண்ணே" என்று கட்டியணைத்துக் கொண்டார்.விழா நிகழ்வுகளைத் தொகுத்துக் கொண்டிருந்த பெண்மணி"பாய் என்ன பேசிடப்போறாருன்னு நினைச்சுட்டிருந்தேன் சார்,திருமூலர் சிவவாக்கியர் குணங்குடி நபிகள்நாயகம் ஓஷோ வேதாத்திரி மகரிஷி குட்டிக்கதைன்னு ரவுண்டு கட்டி அடிச்சுட்டீங்க....சூப்பர் சார்"என்றார்.

குழுமியிருந்த பெண்கள் கூட்டத்திலிருந்து முன்னால் வந்த விழாத்தலைவரின் மனைவி"மல்லிகை மகளிர் மன்றம் சார்பாக" என்று கூறி ஒரு சால்வையை அணிவித்துவிட்டு"அண்ணே அட்டகாசமாப் பேசினீங்க அண்ணே"என்று மலர்ந்தார்.அடுத்தடுத்து முக்கியஸ்தர்கள் கைகுலுக்கி பாராட்டுகளைத் தெரிவிக்க அடுத்த நிகழ்வைநோக்கி நகர்ந்தது கூட்டம்.
மதுரையில் ஒரு திருமணம் உள்ளதென்று கூறி மீண்டும் போட்டோ,செல்ஃபி எடுக்க விருப்பப்பட்டவர்களுடன் புன்னகைத்துக் கைகுலுக்கி விடைபெற்று காரிலேறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு நகர்கையில் உடன் வந்திருந்த ஆனால் மேடையில் பேசிப்பழக்கமிராத ஆனால் உயர் அதிகாரியாக இருக்கிற ஆளவந்தாரிடம் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்க ஆசைகொண்டான்.ஆனால் எப்படியிருந்தாலும் நெகடிவ் பதில்தான் வரும் என்று தெரிந்ததால் கேட்காமலே அடுத்த ப்ரோக்ராம் பற்றிப் பேசவாரம்பிக்கையில் ஆர்ப்பாட்டமாகவும் படு செயற்கையாகவும் ஹாஹாவென்று சிரித்தபடியே " பேச்சை எப்படா முடிப்பீங்கன்னு காத்துட்டிருந்த மாதிரி எல்லாரும் படப்படப்படன்னு சேரை நகத்திப்போட ஆரம்பிச்சுட்டாங்க இல்லங்க" என்று சொல்லிவிட்டு முகத்தைப் பார்த்தார்.மெல்லப் புன்னகைத்தவாறே பதிலேதும்கூறாமல் ஜன்னல் பக்கமாகப் பார்த்து " ஷ் சரியான வெயில் இல்லீங்களா" என்று பேச்சை மாற்றியதும் "ஆமாமாம் " என்று முகத்தைத் துடைத்துக்கொண்ட ஆளவந்தாரின் கோரைப்பற்கள் இப்போது ரத்தம் குடித்த அமைதியுடன் சரேலென உள்ளே புகுந்து மறைந்தன.ஆனால் கார்முழுக்க ரத்தக்கவுச்சி பரவியதைத் தடுக்கவே முடியவில்லை ஏர்ஃப்ரஷ்னரால்.....
#வழிப்போக்கனின் குறிப்புகளிலிருந்து....

..நிஷா மன்சூர்

No comments: