Saturday, December 24, 2016

சூழலை புரிந்து வாழ்வோம் ...

J Banu Haroon

சூழலை புரிந்து வாழ்வோம் ...
இப்போதுள்ள சூழலில் அடிக்கடியான விழாக்கள் , விருந்துகள் ,ஆடம்பரங்கள் குறைந்து காணப்பட்டாலும் ...என்றுமே கேளிக்கைகளும் ,விருந்தும் ,வெட்டி ஆடம்பரங்களும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நம்மவர்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும் ...
பெரிய பணக்காரர் தேவையில்லாமல் பதினெட்டு வயது நிரம்பாத தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு டூ வீலர் வாங்கித்தந்து வெற்று ஆடம்பரத்திற்காக உலா வர செய்தாரென்றால்....இல்லாதவரும் தன் பிள்ளைக்கு கடன் பட்டு வண்டி வாங்கித்தந்து பதில் ஆடம்பரம் செய்கிறார் ...படிப்பில் கவனம் கொள்ள வேண்டிய வயதில் ஓட்டுனராக்கி அழகு பார்ப்பதில் என்ன ஒரு ஆனந்தம் ...பெற்றவர்களுக்கு !..அறியாமைதான் ....
முதலில் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதீத கவனம் வையுங்கள் .கார் ஓட்டிப்பழகுவதில் வேண்டாம் ...பிறகு தானே தேவைப்படும்போது அதையெல்லாம் கற்றுக்கொள்வார்கள் .
உங்கள் பிள்ளை பெண்ணோ ,ஆணோ கண்டிப்பாக கையில் ஒரு டிகிரியோடு தரையில் இறக்கி விடுங்கள் .கடுமையான போட்டிக்கான களத்திலும் ,போட்டிக்கான காலத்திலும் நாம் உலா வந்துகொண்டிருக்கிறோம் .
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன .இன்னமும் ஜிகினா துணி வகைகளுக்கும் ,விதவிதமான வாசனை திரவியங்களும் எண்ணம் கொள்வதும் ,எதிர்பார்ப்பு கொள்வதும் வேண்டாதது .தரமான கல்வியும் ,உள்நாட்டிலேயே வேலை வாய்ப்பும் அமைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது .பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது ...கவனம் .
இன்னொருவரை விட உங்கள் வீட்டு திருமணங்களில் அதிகம் சீர் செய்வது அவமானம் என்பதாகவே நினைத்துவிடுங்கள் .எண்ணங்களில் திருத்தம் கொள்ளுங்கள் .செயல்கள் தானே திருத்தம் பெற்றுவிடும் ...ஒருபோதும் பிறருடைய ஆடம்பர செயல்களுடன் போட்டியிட்டு அகலக்கால் பதித்து அவதிப்பட வேண்டாம் ...செலவுகளை குறைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள் . ஆடம்பரங்களை கைவிடுங்கள் .
நம்முடைய தேவை ஆடம்பர வீடுகள் அல்ல .அவசியத்திற்கான வசிப்பிடங்கள் மட்டுமே .குறைத்து செலவிடக்கற்றுக்கொள்வோம் .எங்கோ ஒரு ஓரத்த்தில் ஒண்டியிருந்துகொண்டு காலமெல்லாம் உழைத்து இளமைத் தொலைக்கும் வாழ்க்கை இனி வேண்டாம் . குளிரிலும் ,வெப்பத்திலும் ,தனிமையிலும் உழைத்து ,உருக்குலைந்து ..வாழ்வை தொலைத்துவிட்டு மாளிகைகளை மட்டும் கட்டிவைத்துவிட்டு , மனிதர்களை தொலைத்துவிட்டு தேடும் அவலநிலை வேண்டவே வேண்டாம் ...
என்ன தேவையோ அதற்கு மட்டுமே நேர்வழியில் உழைத்து பொருளீட்டிக்கொள்ளுங்கள் .குறுக்கு வழிகள் ஆயிரம் திறந்திருக்கலாம் .சந்து பொந்துகளுக்குள் நுழைந்து சுருட்டி நாமும் குற்றவாளிகளாகி ,மேலும் குற்றவாளிகளை உருவாக்கிவிடவும் வேண்டாம் .
நம்முடைய சமூக மேன்மைக்கான எதிர்பார்ப்புகள்... வெறும் சூடான பிரியாணி மாத்திரமல்ல .......இனி , வருங்கால சந்ததியினரின் தரமான நடத்தை .தரமான கல்வி , ,தரமான வேலை ,தரமான வாழ்க்கை ...அதில் கவனம் வைப்போம் ....
---- எல்லாம் வல்ல இறைவன் நம்மை வழி நடத்தட்டும் ......

No comments: