Wednesday, January 18, 2017

தாடி வளர்த்தால்…..

இரண்டு நாள் ‘ஷேவ்’ செய்யவில்லையென்றால், “என்னப்பா சோகம்? தேவதாஸ் மாதிரி தாடிவிட்டுட்ட…” என்று துக்கம் விசாரித்துவிடுவார்கள்..

அப்படிப் பார்த்தால் இந்தப் படத்திலுள்ள யாரும் தேவதாஸ்கள் கிடையாதே! எல்லோரும் மெத்தப்படித்த மேதாவிகள்.. என்று சொன்னால்.. ஆங்.. அந்த வயதில் தாடி வைப்பதொன்றும் பெரிய காரியமில்லை…. அந்த வயது வந்தவுடன் நாங்களும் தாடி வைக்கிறோம் என்றுதான் சொல்லுவோம்… இல்லையா?!

உலகத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்,ஃபார்ஸி, யூதர் இன்னும் எந்த மதத்திலும் நம்பிக்கையற்றோர் வரையிலும் தாடி விரும்பியே வளர்க்கின்றனர்.

இஸ்லாமைப் பொறுத்தவரையில் தாடி கட்டாயமாக்கப்படவில்லை என்றபோதும் நபிவழி என்பதால் விரும்பி வளர்க்கப்படுகிறது.

எதிரிகள் விரட்டும்போது தமது படையிலிருந்த வீரர்களின் தாடியைப் பிடித்துக்கூட எதிரிகளிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தமது படைவீர்கள் தாடி வைப்பதற்குத் தடைவிதித்திருந்தான் மாவீரன் அலெக்ஸ்சாண்டர்.


ஹான்ஸ் லாங்சேத் எனும் நார்வே நாட்டினரின் பதினேழு அடி ஆறு அங்குலம் தாடிதான் உலகிலேயே மிக நீளமாக வளர்க்கப்பட்டதாகும். அது இன்னும் அமெரிக்க அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எனக்குத் தெரிந்து ‘கிளீன் ஷேவ்’ செய்தால்தான் இங்கு வேலை என்று சொன்னதால், வேலையை மழித்துக்கொண்டு வேறுநாடு சென்று தாடி வளர்த்து வேலை செய்யும் நண்பர்களும் உண்டு. அதேபோல, வேலையைக் காரணம்காட்டி தினம் மழித்துக்கொள்ளும் என்போன்ற நபர்களும் உண்டு.    🙂

ஆனால், ‘கிளீன் ஷேவ்’ என்று சொல்லும் தினம் மழித்துக்கொள்ளுதல் என்பதை வேகமாகச் சொல்லிப் பாருங்கள். ‘தினமழித்துக் கொள்ளுதல்’ என்று வரும். அதைப்போல நம் உடல்நலனுக்கு நன்மை சேர்ப்பவற்றை தினம் அழித்துக் கொல்கிறோம் என்கிறது ஆராய்ச்சி!

என்னது கொல்கிறோமா? ஆம், ‘ஷேவ்’ செய்யாமல் தாடியை முறையாகப் பராமரித்து வந்தால்,நம் உடல் ‘கிளீன்’ ஆக இருப்பதற்கு ஏராளமான நன்மைகள் நமக்குக் கிடைப்பதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி.

உடல்நலமில்லை என்றால் உடனே ‘ஆண்டிபயாடிக்’ பரிந்துரைக்கப்படுகிறது. நம்முள்ளே ஏற்பட்டிருக்கும் தொற்றை விரட்ட புது (நன்மை) ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அனுப்பப்படுகிறது இல்லையா? அது தேவையற்றது. அதைவிட அதிமான நன்மை சேர்க்கும் பாக்டீரியாக்கள் நம்மிடமே இருக்கிறது. நாம் வளர்க்கும் தாடியிலேயே இருக்கிறது என்கிறார் இங்கிலாந்தின் பல்கலைக்கழகக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் டாக்டர். ஆதம் ராபர்ட்ஸ்.

தாடி வைத்திருப்போர் மற்றும் மழித்திருப்போர் கொண்ட பலநூறு பேர்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், தாடி வைத்திருப்போரிடம் நூற்றுக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இது அவர்களைத் தொற்றுநோய்களிளிருந்து பாதுகாப்பதையும் உறுதிசெய்துள்ளார்.

டாக்டர். ஆதம் ராபர்ட்ஸின் ஆராய்ச்சி முடிவினை இங்கிலாந்து அரசின் Journal of Hospital Infection வெளியிட்டுள்ளது.

-Rafeeq Sulaiman
https://puthusurabi.wordpress.com

No comments: