Wednesday, January 4, 2017

அரிதார முகமூடிகளின் மனவிகாரங்கள்..! # நிஷாமன்சூர்

ஐந்தாம் வகுப்பு அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும்போது மூலனூரில்தான் முதன்முறையாக அதிரடியான ஆட்டமும் பாட்டமும் கூத்தும் கும்மாளமுமான ஒரு கோவில் திருவிழாவை நேரில் பார்த்ததாக நினைவெனக்கு. அதுவரை முழுக்க முழுக்க இஸ்லாமியச் சூழலில் வாழ்ந்துவந்ததால் இதுபோன்ற விழாக்களைக் கண்டதில்லை.
வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு சீனியம்மா(சீனிவாசனுடைய அம்மாவை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) சுரேஷம்மா மற்றும் பொன்னாத்தாக்காவுடன் அம்மாவும் நானும் தங்கை தம்பிகள் சகிதம் வாயைப் பிளந்துகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் முகமெல்லாம் சாயத்தை அப்பிக்கொண்டு ஒருவனும் கோமாளி வேஷம் போட்டிருந்த இன்னொருவனும் பெண்களை நோக்கி பல்லிளித்தபடியே கைகளில் வைத்திருந்த நீண்ட ரப்பர் தடிகளை ஆணுருப்புகளின் மீது வைத்து ஆட்டினார்கள். அதைக்கண்ட பெண்கள்
கூட்டம் முகத்தைச் சுளித்தபடி "கருமம் புடுச்ச கழிச்சல்லபோற நாய்ப்பயலுக, நாசமாப் போவீங்கடா" என்று திட்டியபடி வீட்டினுள் புகுந்தார்கள். பொன்னாத்தாக்கா மட்டும் தெருவில் இறங்கி "உங்க ஆத்தா வாயிலகொண்டுபோய் வைங்கடா பொட்டப் பசங்களா" என்றவாறே மண்ணைவாரி இறைத்தார். அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அவர்கள் சிறுவர்கள் எங்களை நோக்கி இடதுகை நடுவிரலைக் காண்பித்து இன்னும் கேவலமாக இளித்துக்கொண்டு ஆட்டம் போட்டபடியே கூட்டத்தில் கலந்து மறைந்தார்கள்.
பெண்களை நோக்கி அவர்கள் செய்த சைகைகள் ஆபாசமானவை என்று உணர்ந்தாலும் அதன் பொருள் தெரியவில்லை . ஆனால் எங்களை நோக்கி நடுவிரலைக் காண்பித்தது எதற்கென்று சிறிதும் விளங்கவில்லை. அம்மாவிடம் மெல்லக் கேட்டபோது"உஷ்..... இதெல்லாம் பேசக்கூடாது" என்று கண்களை உருட்டிக் கண்டித்தார்கள். எதாவது எசகுபிசகாகக் கேட்கப்போனால் சீனிவாசன்,சுரேஷ்,மாரியப்பன் டீமுடன் கிரிக்கெட் விளையாடவும் கிணற்று நீச்சல் பழகவும் அனுமதிக்க மாட்டார்கள் என்று வாயைப் பொத்திக் கொண்டேன்.
அடுத்தநாள் ஸ்கூல் முழுக்க இதேபேச்சுதான். கிளாசில் மூத்தவனும் பெண்கள் குறித்த கூச்சமும் சுவாரஸ்யமும் மிகுந்த கதைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் லாஸ்ட் பெஞ்ச் பெரிய பையனுமான முத்துக்கருப்பன் ஏதேதோ சொன்னான். அவன் சொன்னதன் மையப்புள்ளி பெண்கள் என்பவர்கள் ஆணுடைய ஆசைகளுக்காக மட்டுமே பிறப்பெடுத்தவர்கள் என்றும் அதைத்தவிர வேறெந்த உபயோகமுமற்றவர்கள் என்றும் இருந்தது. டியூசன் விட்டு வரும்போது அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் மார்க்கெட்டில் காய்கறி சாமான்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போது தட்டுகளில் சீப்புசீப்பாகக் கூறுபரத்தி வைத்திருக்கும் பழக்கடைகளில் வழக்கமாக வாழைப்பழம் வாங்கும் ஆள் அப்பாவைக் கண்டதும் எழுந்து பலமான கும்பிடு போட்டு கக்கத்தில் துண்டைச் சொருகி பணிவுகாட்டி பழங்களை எடுத்து பையில் போட்டு பணத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு சுருக்குப்பைக்குள் திணித்தான். கிளம்பும்போது ஒரு ஒற்றைப் பழத்தை எடுத்து என் கையில் திணித்துவிட்டு "சாப்பிடுங்க சின்ன மொதலாளி, நல்லா கனிஞ்ச செவ்வாழப்பளம் " என்று இளித்தான். அப்பா "சரி சரி வாங்கிக்கோ" என்றதும் அரைமனதுடன் வாங்கிக்கொண்டு அப்பாவுடன் நடந்தேன்.
சில எட்டுகள் வைத்தபின்னர் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தால்,வாழைப்பழக்கார ஆள் என்னையே பார்த்துச் சிரித்தபடி "பழத்த உரிச்சுச் சாப்பிடுங்க தம்பி" என்றான். அப்படிச் சொன்னபோது நீட்டிய கைகளின் நடுவிரல் துருத்திக் கொண்டிருந்ததுபோல இருந்தது. அந்தக் கைகளில் இருந்த பாம்புவடிவ செப்புக்காப்பு,நேற்று திருவிழாவில் விரலைக் காண்பித்து ரப்பர் தடியை ஆணுருப்பில் வைத்துக் காண்பித்த அதே செப்புக்காப்புதான்.
நிஷா மன்சூர்

No comments: