Thursday, January 26, 2017

ஒரு துரோகியின் உண்மைக் கதை ..

.By. Abu Haashima


ரோமாபுரியின் பேரரசன் ஜூலியஸ் சீசர் .
சென்ற இடமெல்லாம் வெற்றிகளை மட்டுமே
அறுவடை செய்தவன்.
நிஜமாகவே அஞ்சா நெஞ்சன்.
போர் முடித்து வெளிநாட்டிலிருந்து வந்த சீசர்
கம்பீரமாய் அரசவைக்கு வந்தான்.
ரோமாபுரியின் நாடாளும் உறுப்பினர்களெல்லாம் சீசரின் நண்பர்களே .
அதில் முதன்மையானவன்
#புரூட்டஸ் .
நண்பர்கள் எதிரிகளாக மாறி அதையும் கடந்து
துரோகிகளாக உருவெடுத்த பயங்கரம் சீசருக்குத் தெரியாது.
சீசரை வளரவிட்டால்
நமக்கும் ஆபத்து
நாட்டுக்கும் ஆபத்தென்று
துரோக நண்பர்கள் நினைத்தார்கள்.

அவனை தீர்த்துக்கட்டுவதே நல்லதென தீர்மானித்தார்கள்.
சீசர் ...
தன் வீரதீர பராக்கிரமங்களை
செனட் உறுப்பினர்களிடம் விவரித்துக் கொண்டிருக்கும்போதே
சூழ்ந்து நின்ற துரோகிகள்
சீசரின் முதுகில் கத்தியை இறக்கினார்கள்.
போர்க்களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் நின்று அச்சமே இல்லாமல் போராடி ஜெயித்தவன் இந்த துரோகத்தின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
திகைத்தான்...
அவன் திகைப்பிலிருந்து விடுபடுவதற்கு முன்னாலேயே அவன் உடலெங்கும் கத்திகளும் கட்டாரிகளும் பாய்ந்தன.
தடுமாறி விழப்போனவனை
ஆருயிர் நண்பன் புரூட்டஸ் ஓடி வந்து
தாங்கிக் கொண்டான்.
புரூட்டஸ் வந்து விட்டான்...
தன்னை காப்பாற்றுவான் என நம்பி அவன் கைகளில் தஞ்சமடைந்த சீசரை
கத்தியால் அவன் மார்பில் ஆழமாக குத்தி
கீழே தள்ளி தானும் ஒரு துரோகிதான் என்பதை சீசருக்கு சொன்னான் புரூட்டஸ் .
மற்றவர்களெல்லாம் குத்தும்போது திகைத்த சீசர் ... புரூட்டஸ் கத்தியை பாய்ச்சும்போது அதிர்ச்சியில் உறைந்து ஆவியைத் துறந்தான்.
சீசரின் மரணத்தை தொடர்ந்து ரோமாபுரியில் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி ஏற்பட்டது.
சீசரின் மரணத்தின் போது அங்கே இல்லாத சீசரின் மற்றொரு நண்பன் ஆன்டனியும்
சீசரின் வளர்ப்பு மகன் அகஸ்டஸும கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்தினார்கள்.
சீசரைக் கொன்றவர்களை பழிவாங்கவும் உறுதி கொண்டார்கள்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புரூட்டசும் ஒரு படையை திரட்டினான்.
பிலிப்பி என்ற இடத்தில் போர் நடைபெற்றது.
ஆன்டனியிடம் தான் தோற்றுப்போவது உறுதி
என்பதை புரூட்டஸ் உணர்ந்து கொண்டான்.
Abu Haashima
போர்க்களத்தில் அங்குமிங்கும் ஓடிய புரூட்டஸ் தன் நண்பன்
#ஸ்ட்ராட்டோவைக் கண்டுபிடித்து ...
" நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் " என்று கேட்டுக் கொண்டான்.
" ஆன்டனியிடம் நான் உயிரோடு மாட்டிக் கொண்டால் .... நினைக்கவே பயமாக இருக்கிறது. அதனால் நீயே என்னைக் கொன்று விடு " என்றான்.
போரில் பிடிபடும் மன்னர்களையும் வீரர்களையும் கொடூரமாகக் கொல்லும் வழக்கம் ரோமாபுரியில் பிரசித்தம்.
கைதிகளை அடிமைகளாக்கி பெரிய மைதானங்களில் ஓடவிடுவார்கள் .
சக்கரங்களில் கத்திகளை சொருகி ரதங்களை ஓடவிட்டு கைதிகளை தாறுமாறாக கிழித்துக் கொல்வார்கள்.
சிங்கம் புலிகளுக்கு இரையாக்குவார்கள்.
இன்னும் கற்பனைக்கெட்டாத கொடுமைகளை கைதிகள் மீது ஏவி விட்டு பார்த்து ரசிப்பார்கள்.
இப்படி பார்த்து ரசித்தவர்களில் ஒருவன்தான் புரூட்டஸ்.
இதே போன்ற நிலைதான் தனக்கும் வரும் என்பதை எண்ணி பயந்து ஸ்ட்ராட்டோவிடம் தன்னை கொன்று விடும்படி கெஞ்சினான்.
வேறு வழி இல்லாமல் புரூட்டசிடமிருந்து வாளை பெற்றுக் கொண்ட ஸ்ட்ராட்டோ வாளை கெட்டியாக பிடித்துக் கொண்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான்.
ஓடி வந்த புரூட்டஸ் தன் நெஞ்சுக்குள் வாளை சொருவி தற்கொலை செய்து செத்துப் போனான்.
அவன் மனைவி போர்ஷியா நெருப்பை விழுங்கி இறந்து போனாள்.
" ஆதி " காலத்திலிருந்தே
துரோகிகளின் முடிவு
கொலையாகவோ தற்கொலையாகவோதான்
இருந்திருக்கிறது.
இழிவுக்கு ஆளாகித்தான் துரோகிகள் சாவார்கள் என்பதை "ஆதி" வரலாறுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

Abu Haashima

No comments: