Saturday, February 11, 2017

கர்ம யோகி

Vavar F Habibullah

வாழ்வில் யோகியாக நடிப்பவர் பலர்.
ஆனால் எல்லா பலமும் இருந்தும் அரசியலில் ஒரு யோகியாக வாழ்ந்து காட்டுவது அரிதான விஷயம்.
அப்படி வாழ்ந்து காட்டியவர் கர்ம வீரர் காமராஜர்.9 வருடங்கள் தொடர்ந்து தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த போதும் பதவியை பயன்படுத்தி தனக்கென்று தனி சொத்துக்களை சேர்க்காத உத்தமர்.சாக்கடை அரசியலிலும் ஒரு உண்மை மிகு தவ வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர்.
பதவி இல்லாத போதும் டெல்லிக்கே ராஜாவாக வாழ்ந்தவர்.தமிழன் மானம் காத்த தன்மான தமிழ் சிங்கம் அவர்.
என்ன செய்வது!
தமிழினம் ஏழை பங்காளனை கண்டு கொள்ளவில்லை. காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தும் பண்பு அவரை உதாசீனம் செய்தது.
பாக்கெட்டில் நூறு ரூபாய் நோட்டும் பாங்கில் நூற்றிருபத்தைந்து ரூபாய் மட்டும் மொத்த சேமிப்பாய் கொண்டு வாழும் ஒரு பெருந்தலைவனை எந்த தொண்டன் தலைவனாக ஏற்றுக் கொள்வான்.கையில் காசில்லாத கனம் காமராஜர் வாழும் காலத்திலேயே தமிழ் மக்களின் மனதில் இருந்து காணாமல் போய் விட்டார்.

கார்பரேட் நிறுவனங்கள் போல் செயல் படும் அரசியல் நிறுவனங்களே தமிழ் நாட்டில் இப்போது கோலோச்சுகின்றன.கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.சில பதவிகளை ஏலம் மூலமாகவே அடைய முடியும்.
அதிக பணம் செலுத்தும் நபர்களுக்கே கட்சி யில் எம்எல்ஏ சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
ஓட்டை போடுவதற்கு மக்களையும் வாக்கு களை எண்ணும் அரசு எந்திரங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகார பலம் வாய்ந்த பணம் படைத்த அரசியல் கட்சிகளுமே ஆட்சி அமைத்து நாட்டின் கனிம வளங்களை சுரண்டி அதன்மூலம் தங்கள் செல்வ வளத்தை பெருக்கி தங்கள் அரசியல் கட்சி நிருவனங்களுக்கு பெருத்த லாபத்தையும் மூலதனத்தையும் பெற்றுத்தர உதவுகின்றன.
ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் இயங்கி வரும் சில அரசியல் வியாபார நிறுவனங்களும் இப்போது தமிழகத்தில் பெருத்து விட்டது.எலக்சன் நேரத்தில் தங்கள் செல்வாக்கை அல்லது ஆதரவை முன் வைத்தது வாக்கு வங்கி என்ற பெயரில் அதிக பணம் ஈட்டி அரசியல் பிரபலங்களாக உலா வருகின்றன.
அரசியல் கட்சி செய்தி தொடர்பாளர்கள் மார்கெடிங் எக்ஸ்கியூட்டியூக்களாக பணியில் அமர்ந்து தலைவர்களை ஒரு பிராண்டாக மாற்ற துணைபுரிகின்றனர்.இவர்களாலேயே சினிமா போன்று மீடியா தொழில்களும் தமிழகத்தில் அதிக ஏற்றம் பெற்று வரு கின்றன.
தேர்தல் நேரங்களில் இந்த மீடியாக்கள் அதிக சுறுசுறுப்புடன் இயங்கி பெற்றுக் கொண்ட பணத்திற்கு ஏற்றவாறு மக்களை மூளைச் சலவை செய்வதில் நிபுணத்துவம் பெற்று திகழ்கின்றன.சினிமா போன்று அரசியல் நிகழ்வுகளும் தமிழகத்தில் சிறந்த பொழுதுபோக்காக திகழ இந்த மீடியாக்கள் துணை புரிகின்றன.அரசியல் பட்டி மன்றங்கள் கருத்து பரிமாற்றங்கள் என இந்த துறை பலகோடிகளை ஈர்க்கும் வலை தளங்களாக பரிணாம வளர்ச்சி பெற்று வருகின்றன.
சினிமா நடிகர்களை போன்றே அரசியல் தலைவர்களுக்கும் நடை உடை பாவனை ஒப்பனைகளை கற்றுத் தரும் ஹை டெக் பயிற்ச்சி நிறுவனங்களும் பெரிய நகரங்களில் தோன்றி விட்டன.வெளிநாடு சென்று இதற்கான பிரத்தியேக பயிற்ச்சி பெற்று திரும்பும் பணக்கார அரசியல் எம்பிக் கள் இப்போது நம் நாட்டில் அதிகம்.
தமிழ் நாட் டில் சுத்த தமிழிலும் மேநாட்டில் ஆங்கிலத்தி லும் உரையாடும் வித்தகம் அறிந்தவர்கள் இவர்கள்.
கட்சிகளை இணைத்து கூட்டணி சேர்க்கும் அரசியல் புரோக்கர்களும் இப்போது அதிகரித்து விட்டனர்.இதன்மூலம் பெருந்தொகையை கமிசனாக எலக்சன் நேரத்தில் இவர்கள் பெற்று விடுகின்றனர்.இவர்கள் தரும் செய்திகளை அறிக்கைகளாக வெளியிட சில மீடியா நிறுவனங்களை இவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.செய்தி என்ற பெயரில் இவர்கள் தரும் விளம்பரங்களே அந்த செய்தி நிறுவனங்கள் வளர உதவி புரிகின்றன.பாமர மக்களை ஒட்டு மொத்தமாக தங்கள் வலையில் வீழ்த்துவதற்காகவே இந்த மீடியாக்களில் நிகழ்ச்சி தொகுப்புகள் திட்டமிட்டு அரங்கேறு கின்றன.
வரும் காலங்களில் காமராஜர் போன்ற அரசியல் தலைவர்கள் தோன்றமாட்டார்கள்.
பணத்தை வீசி மக்களை தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கும் வெத்து வேட்டு அரசியல் காமுகர்கள் தாங்கள் கற்று தேறிய ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் மக்கள் மன்றத்தில் வித்தைகளாக்கி தங்களை பிரமாண்டங்களாக்க முயற்ச்சிகள் மேற் கொண்டு வருவது சற்று வெட்கக் கேடான விஷயமாகத்தான் தோன்றுகிறது.
தமிழ் சமுதாயத்தில் நல்ல கருத்துக்களை பரப்பிடும் தமிழ் சான்றோர் மற்றும் ஆன்றோர் எல்லாம் ஒட்டு மொத்த லீவில் நாட்டை துறந்து மறந்து போய் விட்டனரோ என்று அஞ்சும் நிலையில் நாடு போய் கொண்டிருக்கிறது.

Vavar F Habibullah

No comments: