Monday, February 20, 2017

கரங்கள் வலுப்பெறட்டும்..

தான், தனக்கு என்பதைத் தாண்டி நாம் நம் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. நமக்கு முன் இருந்தவர்கள் சமூக உணர்வோடு செயல்படாமல் போயிருந்தால் இன்று நாம் அனுபவிக்கும் பலவும் நமக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இன்று நமது பயன்பாட்டில் உள்ள தொழில் நுட்பம், கல்வி, புத்தகங்கள் என சகலமும் யாரோ ஒருவரின் உழைப்பின், சமூகப் பணியின் பலனாகக் கிடைத்தவையே. நாமும் நம் பங்கிற்கு ஏதாவது சமூகப் பணி செய்து நிறைவான வாழ்க்கை வாழ முற்படுவதே அர்த்தமுடையதாக இருக்கும்.
அன்னை ராபியா அறக்கட்டளையைத் தொடங்கி நான் சில நற்காரியங்களை முன்னெடுத்து வரும் வேளையில், என்னுடன் MCA படித்த கல்லூரி நண்பர்கள் சிலரும் சமூக உணர்வோடு செயலாற்றி வருவது மிகுந்த மகிழ்வைத் தருகின்றது.

மாணவர்கள் நல ஆர்வலர் Mohamed Rabikஅறிமுகம் தேவையில்லை. கல்வி உதவித் தொகை, மேற்படிப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கி பல்லாயிரம் மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டி வருகிறார். அவரது இப்பணி போற்றுதலுக்குரியது. படிப்பதற்கு பணம் ஒரு தடையே இல்லை. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எந்தப் படிப்பும் நமக்கு எட்டாக்கனியல்ல என்பதை மாணவர்களுக்கு புரிய வைத்தவர். தற்போது அவரோடு கை கோர்த்திருக்கும் மற்றொரு நண்பர் Mohamed Saad Ansari
இருவரும் இணைந்து, படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி சில பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார்கள். Web Design, Android App Design குறித்த பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் பல இளைஞர்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் போல் மற்றொரு நண்பர் Natheem Mohamedபொள்ளாச்சியில் இயங்கி வரும் அல் ஆமில் கல்வி அறக்கட்டளையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பொள்ளாச்சி பகுதியில் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளிலும், உயர்தரத்திலான புதிய பள்ளியொன்றைத் தொடங்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இவர்கள் மூவருமே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. படித்தோம், நல்ல வேளையில் அமர்ந்தோம், வாழ்க்கையை வாழ்ந்தோம் என்றில்லாமல் நம்மால் இச்சமூகத்திற்கு என்ன செய்ய இயலும்?என்பதை யோசித்து அதன்பால் சமூக உணர்வோடு இயங்கி வருவது கண்டு அகம் மகிழ்கிறேன்.
இவர்களைப் போன்று இன்னும் சில கல்லூரி நண்பர்களும் சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து இன்னும் பல பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம்.
இறைவன் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து எங்களது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இறையருள் அதற்குத் துணை நிற்கட்டும்..

ராபியா குமாரன்

No comments: