Tuesday, February 28, 2017

தோல்விகளைக் கொண்டாடு


ஒரு வெற்றி என்பது
பல தோல்விகளால் ஆனது
நண்பா
தோல்விகளின் சுமைகளைத்
தூக்கித் தூக்கி
தோள்வலிமை உயர்த்தி உயர்த்தி
ஒரு நாள் நீ உன்
வெற்றியை ஏந்தி நிற்பாய்
ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றி கிடைக்கவில்லை
என்று நீ புலம்புவது அறிவீனம்
ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றியின் ஒரு பகுதி

உனக்குக் கிடைக்கிறது என்பதால்
உண்மையில்
நீ உன் தோல்விகளைக்
கொண்டாடவே வேண்டும்
தேன்கூடு என்பது
எத்தனையோ தேன் துளிகளின்
கூட்டு அல்லவா
தேன்கூடு நிறைவடையும்வரை
நீ காத்திருக்கத் தேவையில்லை
ஒவ்வொரு தேன் துளிக்குமே
நீ உன் வெற்றியைக் கொண்டாடலாம்
மீண்டும் மீண்டும்
தேன் கொண்டுவருவதுமட்டுமே
தேன் கூட்டிற்கான மாறாத நியதி
அதுதான்
வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும்
ரகசியம்
ஆனால்
உன் கொட்டாட்டங்கள்
உன் வலியைக் கொன்றுவிட்டால்
அன்றோடு உன் முயற்சிகள்
நின்றுவிட்டால்
அது ஒன்றே உண்மையான தோல்வி
கவலை வேண்டாம்
அதற்கும் மாற்றுமருந்து உண்டு
மீண்டும் எழு
நண்பா மீண்டும் எழு
- அன்புடன் புகாரி

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
https://anbudanbuhari.blogspot.in

No comments: