Monday, February 20, 2017

படித்தவர்களும், அரசியலும்!

அடிக்கடி இல்லாவிட்டாலும், தேர்தல் நேரங்களில் மட்டுமாவது இந்த கோஷம் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனிக்க முடிகிறது. “படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்”. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக இதென்ன அபத்தம் என்று குழம்பிப் போகிறோம். இப்போது என்னவோ அரசியலில் இருப்பவர்கள் அத்தனை பேரும் கைநாட்டுகள் என்பதுபோல ஒரு பொதுப்புத்தி மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக so called படித்தவர்களாலும் ஊடகங்களாலும் திணிக்கப்படுவது சர்வநிச்சயமாக ஜனநாயகத்தின் பண்புக்கு எதிரானது.



அதிலும் குறிப்பாக இந்த ஐஐடி, ஐஐஎம் பீட்டர் கோஷ்டிகளின் தொல்லை கொஞ்சமும் தாங்கமுடியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இட்லிக்கடை சரத்பாபுவை வைத்து கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது யாரோ கொட்டிவாக்கம் வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளராம். அதென்னவோ தெரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் மட்டுமே இவர்களுக்கு அரசியலில் குதிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆர்வம் வந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் மக்களை கொசு கடித்தாலென்ன, சாக்கடை ஓடினால் என்ன? ஒரு சாலை மறியல், ஒரு கோரிக்கை மனு.. ஏதாச்சும் உண்டா? பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டும்தான் மக்களுக்காக இந்த படித்தவர்கள் போராடுவார்களா?

‘இல்லை, நாங்களும் மக்களுக்காக போராடியிருக்கிறோம்’ என்று இந்த படித்தவர்கள் சொல்வார்களேயானால், அதிகபட்சம் ரத்ததானம் செய்திருப்பார்கள். மரம் நட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் ஏதோ ஒரு என்.ஜி.ஓ.வை நடத்திக் கொண்டு 30% சேவை, 70% லாபம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, அடிமட்டத்தில் இருந்து மக்களுக்கு அறிமுகமாகி படிப்படியாக மேலே வரும் ஒருவனுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமானது. பள்ளிப் பகுதியிலும், சமய வழிபாடுகள் நடக்கும் பகுதியிலும் இருக்கும் டாஸ்மாக்கை மூடவைக்க போராடி, மக்களைக் கூட்டி மறியல் செய்து, ரவுடிகளால் தாக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டு வெற்றி கண்ட குறைந்தபட்ச அனுபவம் கூட இவர்களுக்கு இருப்பதில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் ஐ.ஐ.எம். பட்டதாரி சரத்பாபு போட்டியிட்டபோது அதை கடுமையாக எதிர்த்தேன். ஏனெனில் அவர் அத்தொகுதியில் தீர்த்துவைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரச்சினைகள்தான். பிறந்ததிலிருந்தே தென்சென்னையில் வாழும் எனக்கு சரத்பாபுவை விடவே அதிகம் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும். உதாரணத்துக்கு அவர் தீர்த்து வைப்பதாக சொன்ன வேளச்சேரி – மடிப்பாக்கம் – பள்ளிக்கரணை பகுதி வெள்ளநீர் வடிகால். புவியியல் ரீதியாக இப்பிரச்சினையை தீர்க்கும் வாய்ப்புகள் இல்லை என்று எப்போதோ நிபுணர்கள் அறிவித்துவிட்டார்கள். ஏனெனில் சென்னையிலேயே கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதி இது. இங்கே பாதாள சாக்கடை கொண்டுவரும் திட்டமேகூட இந்த புவியியல் அமைப்பால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. +2 ஃபெயில் ஆன எனக்கு தெரியும் இந்தப் பிரச்சினை கூட, ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு வந்தவருக்கு தெரியவில்லை என்றால், அவருக்கு ஏன் நான் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி உளற வைக்க வேண்டும்? மேலும் அவர் கொடுத்த பல வாக்குறுதிகள் வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர் கொடுக்க வேண்டிய வாக்குறுதிகள்.

இப்படியிருந்தும் so called படித்தவர்கள் பலரும் புல்லரித்துப் போய் சரத்பாபுவுக்கு வாக்குப் போடுங்கள் என்று வாய்வழிப் பிரச்சாரம் செய்ததையும், ஊடகங்களெல்லாம் ஏதோ சென்னை மக்களை காக்க வந்த மாகானுபவர் என்றும் பரப்புரை செய்ததையும் விட பெரிய கேலிக்கூத்து வேறொன்றும் இருந்துவிட முடியாது. அவருடைய இட்லிக்கடைகள் மூலமாக ஏதோ 30-40 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்கிறார்கள். வருமான வரித்துறை இதை கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ந்து, உண்மையெனில் போதுமான வருமான வரியை அவர் செலுத்தியிருக்கிறாரா என்று தெளிவுப்படுத்த வேண்டும். ஏனெனில் நான் பார்த்த Food King Outletகளை விடவும் முனியாண்டி விலாஸ்கள் கொஞ்சம் சுமாரானவையே. சரத்பாபு பற்றி வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிம்பம் தவறானது எனில் தவறான தகவல்களை மக்களுக்கு தருவதாக சொல்லி, அவர் மீது இதுவரை அவரை ஆதரித்து வந்த படித்தவர்களே கேஸ் போட வேண்டும். அப்படி அவருக்கு நிஜமாகவே வருமானம் வரும் பட்சத்தில், அவர் ஏன் கல்லூரிகளில் தன்முனைப்புப் பேச்சுகளை பேசி 25000, 30000 என்று ஃபீஸ் வாங்கப் போகிறார்? (எனக்குத் தெரிந்து இப்போது அவருடைய மேஜர் வருமானம் இதுதான்) ஓசியிலேயே மாணவர்களுக்கு ‘ஊக்கம்’ கொடுப்பாரே? மக்கள்/சமூகம் குறித்த சரத்பாபுவின் புரிதல் எவ்வளவு மொக்கையானது என்பதை, அவர் பங்கேற்ற ‘நீயா நானா’ டிவி நிகழ்ச்சி மூலமாக அப்பட்டமாக பறைசாற்றியிருக்கிறார்.

ஐ.ஐ.எம் / ஐ.ஐ.டி ரேஞ்சுக்கு படித்தவர்களிடம் நாம் காணும் பிரச்சினை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தை நிலவரம் அவர்களுக்கு தெரியும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வரவுசெலவு அவர்களுக்கு அத்துபடி. ஆனால் பொண்டாட்டிக்கு வாங்கித்தர வேண்டிய மல்லிகைப்பூ முழம் பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் ஏகத்துக்கும் படித்த மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும் ஏழை என்பதற்கு உச்சவரம்பு ஒரு நாளைக்கு ரூ.32/- வருமானம் என்று நிர்ணயிப்பார்களா?

படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கார்ப்பரேட் துறைகளில் நடைபெறும் சுரண்டலுக்கும், எந்த படிக்காதவனுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

படித்தவர்களும் அரசியலுக்கு வரலாம் என்கிற வாதத்தை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுவது பாசிஸம். அப்படியெனில் அன்னா ஹசாரே க்ரூப்பு மட்டும்தான் அரசியலில் இருக்கமுடியும்.

இப்போதே கூட சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்தான். ஏராளமான மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பொருளாதாரம் படித்தவர்களும் நிரம்பிய அவைகள்தான் இவை. எனவேதான் சொல்லுகிறோம். படித்தவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் எல்லாம் மாறிவிடும் என்பது வெறும் யூகம். படித்தவர்களால்தான் மாற்றம் சாத்தியம் என்பது மாயை. படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?

எழுதியவர் யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com

No comments: