Sunday, March 5, 2017

எனக்குத் தெரிந்து ....! பாகம் 1.

எனக்குத் தெரிந்து ....!
உங்களுக்கு மேலே உள்ளவர்கள் யார் ?
எனக்குத் தெரிந்து, நல்ல கல்வியறிவும், திறமையும், அனுபவமும் இருந்தால் எந்த தொழில் அல்லது பணி செய்தாலும் வெற்றிபெறலாம் என்பதே நாட்டு வழக்கம். அது பொது நிறுவனமாகவோ, தனியார் நிறுவனமாகவோ ஏன் அரசு அலுவலிலும்தான்.
ஆனால் பாருங்கள், எனக்கு தெரிந்த ஒருவர் மேற்சொன்ன எல்லா குணநலன்களையும் கொண்டவர், எனது கண் முன்னாலேயே பல தனியார் நிறுவனங்களில் நல்ல பொறுப்பில் நிதித்துறையில் பணியாற்றினார். எந்த நிறுவனத்திற்கும் அவரது வேலைக்கான மனுசெய்தால் உடனே நேர்முகக்காணலுக்கு அழைக்கப்பட்டு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்துவிடும் ஆனால் அவரால் எந்த நிறுவனத்திலும் ஓரிரு வருடங்களுக்குமேல் பணியாற்ற முடிந்ததில்லை. இவரைப்போலவே இன்னும் பலரும் இருக்கிறார்கள்.
ஏனென்று பார்ப்போமா?

இரக்க குணமும் நேர்மையும் அவரது கூடப்பிறப்புகள். தனக்கு தந்த பணியை செவ்வனே செய்தாலும், மேல்மட்ட நிர்வாகத்துக்கு சலாம் போடுவதென்பது அவரது ஆத்திசூடியிலும் கிடையாது. ஏன் அவர்களைப்பற்றி எந்த கவலையும் கிடையாது. கீழ்மட்டத்து ஊழியர்களிடம் உயர்வு தாழ்ச்சி பார்க்காமல் சமமாக பாவித்து பழகுவது மிகவும் அரிதான குணம் அவரிடம் உண்டு. அவரது கீழ்மட்ட ஊழியர்களின் பழக்க வழக்கம் முதல் குடும்ப அங்கத்தினர்கள் வரை அத்தனையும் அத்துப்படி, அது வேண்டும், ஆனால் அதுமட்டுமே போதுமா?
யாரும் தின்மையான காரியங்களுக்கு மேலுள்ளோரை அனுசரித்துப் போக்கவேண்டியதில்லை. ஆனால் ஒன்றுமே இல்லாததற்கும் ஏன் முறைத்துக்கொள்ள வேண்டும்!
மேலதிகாரிகள் யாவரும் காக்கா பிடிப்பதை விரும்புவதில்லை. (ஒரு சிலரை தவிர்த்து) ஒரு புன்சிரியும், காலை வாழ்த்து சொல்வது ஒரு இழுக்காகாது, சுமூகமான சூழ்நிலையை அலுவலத்தில் ஏற்படுத்தும். எல்லாரும் இன்புற்று பணி செய்ய எதுவாகவும் இருக்கும்.
தனது இறுக்கமான எளிமையை தான் வகிக்கும் உயர்நிர்வாக பொறுப்பிலும் பட்டவர்த்தனமாக காட்டுவதும் கடைப்பிடிப்பதும் அவரது நிரந்திர வேலைக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகவே இருந்துள்ளது கண்கூடாகவே தெரிகிறது.
இன்றைக்கும்கூட அவர் வேலை பார்த்த நிறுவனங்களில் அவரைப்பற்றி மேல்மட்டத்திலிருந்து எந்தவிதமான புகாரும் கிடையாது. மாறாக, அவருடன் பணியாற்றியவர்களும் அவரின்கீழ் வேலைபார்த்தவர்களும் என்றும் அவரது புகழ் பாடுகின்றனர்.
தற்போது அவர் பணி ஒய்வு பெற்றுவிட்டாலும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனுமேயே வாழ்க்கையை நடத்துகிறார். அவர்கள் அப்படித்தான் தன் விருப்பம், தன்னிலையில் பிறழாமை, யாரையும் குறைகூறாமை போன்ற நற்குணங்களுடன் வாழ்வியலை நகர்த்திசெல்பவர்கள்.
படிப்பினை:
அறிவையும், திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தி செவ்வனே பணிசெய்தாலும் கீழுள்ளோருக்கு வேலையை படித்துக்கொடுத்தாலும் அன்பு செலுத்தினாலும் அவர்களின் ஆதரவை பெறுதலும் மட்டும் போதாது. செய்யும் வேலையில் நிரந்தர நிலைப்பாடும் முன்னேற்றமும் வேண்டுமென்றால் கீழுள்ளோரை மகிழ்ச்சி படுத்துவதோடு மேலுள்ளோரையும் திருப்தி படுத்துவதும் மிகவும் அவசியம்.
பாகம் 1.
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: