Sunday, March 19, 2017

• ஒரு படைப்பின் காப்புரிமை முதன்மையாக யாருக்குச் சொந்தமானது?

• ஒரு படைப்பின் காப்புரிமை முதன்மையாக யாருக்குச் சொந்தமானது?
— அதன் ஆக்கியோன் யாரோ அவரே முதன்மை உரிமையாளர்.
• ஆக்கியோன் என்பவர் யார்?
— இலக்கிய அல்லது நாடகப் படைப்பு என்றால், ஆக்கியோன் – அதாவது, அதை உருவாக்கியவர்.
— இசைப்படைப்பு என்றால், இசையமைத்தவர்.
— திரைப்படம் என்றால், தயாரிப்பாளர்
— ஒலிப்பதிவு என்றால், தயாரிப்பாளர்
— புகைப்படம் என்றால், புகைப்படம் எடுத்தவர்.
— கணினியில் உருவாக்கியது என்றால், அதை உருவாக்க வைத்த காரணியாக இருந்தவர்.
• இசை ஒலிப்பதிவில் யாருக்கெல்லாம் காப்புரிமை உண்டு?

— இசை ஒலிப்பதிவில் பலருக்கும் காப்புரிமை உண்டு. உதாரணமாக, பாடலை எழுதிய பாடலாசிரியர், இசையமைத்த இசையமைப்பாளர், பாடிய பாடகர், பின்னணியில் இசைத்த இசைக்கலைஞர்கள், ஒலிப்பதிவை தயாரித்த நபர் அல்லது நிறுவனம்.
• பொது நிகழ்ச்சியில் இசை ஒலிப்பதிவைப் பயன்படுத்த லைசன்ஸ் அல்லது அனுமதி பெற வேண்டியது கட்டாயமா?
— ஒலிப்பதிவில் உரிமை உள்ள ஒவ்வொருவரிடமும் அனுமதி பெற வேண்டும். அதாவது, ஒலிப்பதிவின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியவரும் அடங்குவர்.
ஏதாவது புரிகிறதா? இதுதான் காபிரைட் சட்டத்தின் சுருக்கம். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், இது வேறு நாட்டின் சட்டத்திலிருந்து சுட்டெடுக்கப்பட்டது என்று புரியும். இந்தியச் சூழலுக்கேற்ப இன்னும் திருத்தங்கள் தேவைப்படும் என்பது புரியும்.
திரைப்படம் என்றால் தயாரிப்பாளருக்கே காப்புரிமை, இயக்குநருக்கு காப்புரிமை கிடையாது. ஒலிப்பதிவு என்றால் தயாரிப்பாளருக்கே காப்புரிமை, கலைஞர்களுக்குக் கிடையாது. அதுவே இசை ஒலிப்பதிவு என்றால் எல்லாருக்கும் காப்புரிமை!
அப்படியானால் திரைப்படத்தில் வரும் இசை ஒலிப்பதிவுப் பாடலுக்கு காப்புரிமை யாருக்கு? இசையமைப்பாளருக்கு மட்டும் இருக்க முடியாது அல்லவா? திரைப்படத்துக்கான காப்புரிமை இயக்குனருக்கு இல்லை, தயாரிப்பாளருக்குத்தான் உரிமை என்னும்போது, அதில் வரும் இசைக்கான உரிமை மட்டும் இசையமைப்பாளருக்கு மட்டும் எப்படிச்சேரும்?
இப்போதுதான் சர்ச்சை எழுந்திருக்கிறது. எதிர்காலத்துக்கும் சேர்த்து. வழக்கின் மூலம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது.
இந்த மாதிரி சூழல்கள் குறித்து காபிரைட் கையேட்டில் ஒரு கேள்வி பதில் இருக்கிறது.
• காப்புரிமைச் சட்டத்தை கண்மூடித்தனமான கடுமையுடன் பின்பற்றுவது சமூகத்தின் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கு தடை போடுவதாக ஆகாதா?
— ஆமாம். கண்டிப்புடன் பயன்படுத்தினால் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடும். படைத்தவர்கள் மற்றும் சமூகத்தின் நலன்களுக்கிடைய சமநிலை பேணுவதைக் கருத்தில் கொண்டு, சில விதிவிலக்குகளும் தரப்பட்டுள்ளன.
இவர் தவறோ அவர் தவறோ எவர் தவறோ... இதனால் பாதிக்கப்படுவது கலைகள்தான். எங்களைப்போல தூரத்திலும் வெளிநாட்டிலும் இருப்பவர்களுக்கு திரைப்படப் பாடல்களின் மெல்லிசை நிகழ்ச்சி என்பது மிகவும் விருப்பமான விஷயம். இந்த மோதலில் அவர்களுக்கே ஏமாற்றம். (எங்களைப் போல என்றுதான் சொல்லியிருக்கிறேன். எனக்கு அல்ல. மெல்லிசை நிகழ்ச்சிகளின் மீதான ஆர்வம் விடலைப்பருவ வயதுடன் போய்விட்டது.)
மற்றபடி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உற்சாகமாய் இருக்கும்போது மடைதிறந்து தாவும் நதியலை நான் என்று லேசான துள்ளலுடன் வெளியே தெரியாமல் உள்ளுக்குள் ஆடிக்கொண்டே போய்க் கொண்டே இருப்பேன். எழுதியவன், இசையமைத்தவன், பாடியவன் எவனைப்பற்றியும் கவலையில்லை. பேரனுக்காக சின்னப்பாப்பா எங்க செல்லப்பாப்பா பாடலை இப்போதும் பாடுகிறேன். கே.வி. மகாதேவன் இப்போது இருந்து நான் பாடுவதைக் கேட்க நேர்ந்தாலும், நான் செய்வது இசைக் கொலையே என்றாலும் மகிழ்ச்சியே அடைவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்
நான்வாழ யார் பாடுவார்!
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி
என்னோடு யார் ஆடுவார்...?!
கமான் டான்ஸ். :)

Shahjahan R

No comments: