Wednesday, March 8, 2017

இம்மையும் மறுமையும்

Nagore Rumi
நீங்கள் ஒரு பத்திரிக்கையில் அல்லது டிவியில் செய்தி சேகரிப்பவராக இருந்து, உங்களுக்கு செய்தி எதுவும் கிடைக்காவிட்டாலும் தினமும் ஒரு விஷயத்தை செய்தியாக அனுப்பிக்கொண்டிருக்கலாம். கொஞ்சம் மாற்றி மாற்றி. அது உண்மையாகவே இருக்கும். அது என்ன?
இலங்கைக் கடற்படையினரால் --- தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதான் செய்தி. எத்தனை பேர் என்ற கட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு எண்ணைப் போட்டுக்கொள்ளலாம்.
சிந்துபாத் கதை படித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தொடருமா என்று வளர்ந்தபிறகே யோசிக்க முடிந்தது. ஆனால் அந்த வயதில் ஒவ்வொரு நாளும் படிக்கும்போது அடுத்த நாள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம்தான் இருந்தது.

தமிழக மீனவர்கள் கதையும் அப்படியாகிவிட்டது. இன்று ஒரு முன்னேற்றம். ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்கிறது செய்தி. இல்லை என்று மறுக்கிறது இலங்கைச் செய்தி. அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் கருத்தும் கண்டனமும் தெரிவிக்கின்றனர்.
வடிவத்தில் கண்ணீர்த்துளியைப் போல இருக்கும் குட்டித்தீவான இலங்கை தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் கண்ணீரை வரவழைத்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் நடந்து சென்று ஒட்டுமொத்தமாக காறித்துப்பினால்கூட இலங்கை மூழ்கிவிடும். அவ்வளவு சின்ன நாடு. ஆனால் துணைக்கண்டம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய நாடான இந்தியா அதையெல்லாம் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் மட்டும் இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்க முடியும்?
எனக்குத் தெரிந்து ஒரே காரணம்தான் இருக்க முடியும். நாட்டின் மீது அக்கறையோ, அன்போ, பற்றோ இல்லாதவர்கள் கையில் ஆட்சியதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஜாதியினரை அல்லது மதத்தினரை ஒழிப்பதில்தான் அவர்களது கவனம் இருக்கிறது. மாட்டின் மீது உள்ள அக்கறை மனிதனின் மீதில்லை.
சிங்களவர்களுக்கு தமிழர்மீது பிரத்தியேகமான வெறுப்பு காலம் காலமாக இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இலங்கை சென்றபோது ஒரு சிங்களக்கடையில் தேநீர் அருந்தினேன். டீ குடித்துவிட்டு எவ்வளவு பணம் என்று கேட்டபோது, ’தெகாய் பணாய்’ என்று சொன்னான் (என்று ஞாபகம்). எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கும் தெகாய் பணாய் என்றான். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு முஸ்லிம் சென்றார். நான் ஸலாம் சொன்னேன், அவரும் பதில் சொன்னார். அவரிடம் பிரச்சனையைத் தமிழில் சொன்னேன். தெகாய் பணாய் என்றால் இரண்டரை ரூபாய் என்று சொன்ன அவர், சிங்களவர்கள் தமிழர்கள்மீது வெறுப்பாக இருப்பார்கள், வேண்டுமென்றே, தமிழ் தெரிந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள், இனி டீ குடிக்க வேண்டுமென்றால்….என்று சில ஆலோசனைகளைச் சொன்னார்.
எனக்கு அது நினைவுக்கு வருகிறது. சிங்களவருக்கு தமிழர்மீது வெறுப்பு. இங்குள்ளவர்களுக்கு யார்மீது வெறுப்பு? யார்மீது வெறுப்பு இருந்தாலும் சரி, நாட்டின் மீது உண்மையான பிடிப்பு, பற்று இருக்குமானல் ஏதாவது செய்திருப்பார்கள். இலங்கையைப் பார்த்து இந்தியா அச்சப்பட வேண்டிய அவசியமில்லையே.
உரத்த குரலில் காரசாரமாகப் பேசுவதனால் எதுவும் சாதிக்க முடியாது. உடனே ஏதாவது செய்யவேண்டும், உடனே. ஆமாம் உடனே.
அப்படிச் செய்வதற்கு முதுகெலும்பும் நேர்மையும் உள்ள தலைமை தேவை. அண்ணா, காமாரஜர், கக்கன். லால்பகதூர், மகாத்மா, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள்தான் என் நினைவுக்கு வருகிறார்கள். அவர்களெல்லாம் நாட்டை நேசித்தவர்கள். ஏன், நேருவும் இந்திரா காந்தியும் கூடத்தான். அவர்கள் எடுத்த சில முடிவுகள் தவறாக இருக்கலாம். ஆனால் நாட்டை அந்நியனிடம் என்றுமே விட்டுக்கொடுக்க, அபகரிக்க, நாட்டின் இறையாண்மையோடு அடுத்தவன் விளையாட அவர்கள் அனுமதித்ததில்லை.
இனியாவது உண்மையாக நாட்டை நேசிக்கும் மனிதர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பு நமக்கு உள்ளது. தவறாகத் தேர்ந்தெடுத்தன் விளைவை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் செய்த முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய மாட்டோம் என்று நம்புகிறேன். இம்மையில் குருடர்களாக இருப்பவர்கள் மறுமையிலும் குருடர்களாகவே இருப்பார்கள் என்கிறது திருமறை!
தமிழக மீனவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். என்னால் செய்ய முடிவது இதுதான். ஆனால் இறைவனின் கோபத்துக்கு ஆளாகுபவர்கள் ஒருக்காலும் தப்பிக்க முடியாது. இந்த உலகிலேயே அதற்கான ஆதாரங்கள் உண்டு. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான். முசோலின் தலைகீழாகக் காதலியுடன் நடு ரோட்டில் தொங்கவிடப்பட்டான். இம்மையிலேயே இப்படி என்றால் மறுமையைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும். வாக்களிப்பவர்கள் இன்னும் அதிகமாக யோசிக்க வேண்டும்.


Nagore Rumi

No comments: