Monday, May 1, 2017

திறக்கப்படாத ஒரு கடையின் தூசி படிந்த திண்ணை

திறக்கப்படாத
ஒரு கடையின்
தூசி படிந்த திண்ணை
எனக்குத் தரும்
தனிமை சுகம்
பங்களாவின்
குளிரூட்டப்பட்ட உன் அறைகளில்
உனக்குக் கிடைப்பதில்லை என்பதை
கோபம் வழியும்
உன் கண்களின் வழியே
நான் அறிவேன்

திண்ணைகளில்
ஞானம் பெற்றவர்களை
தேடித் தேடி அலையும்
பித்தன் நான்
இரவின் ஓரங்களில்
துண்டு விரித்து படுத்திருந்த
ஒரு மிஸ்கீன்
என்னைப் பார்த்துச் சிரித்த
ஏளனச் சிரிப்பின்
அர்த்தத்தை
அடுத்த நாளே
அழுது கொண்டாடியவன் நான்
மழையின் சாரலில்
நனைந்து கொண்டே
இரவு முழுவதும்
விழித்துக் கொண்டிருந்த
ஒரு திண்ணைவாசியின்
விழிகளில்
வீடிழந்த அவன் சோகத்தை
படித்தவன் நான்
வாழ்ந்த பொழுதுகளில்
சேர்த்ததை உண்ணக் கிடைக்காமல்
நம்பிக்கைகளை மட்டுமே
உண்டு வாழ்ந்த
ஒரு நோன்பாளியை
தெரிந்தவன் நான்
தெரியாத ஞானங்களைத்
தேடித்தேடி அலையும்
என் பார்வையின் பயணம்
முடிவில்லாதது
அரசமரங்களும்
ஆலயங்களும் சொல்லித் தராத
ஒரு பாடத்தை
இரவு நேர உணவு கிடைக்காமல்
காத்திருக்கும்
ஒரு ஏழையின்
நம்பிக்கை இழக்காத முகம்
எனக்குச் சொல்லித்தரக் கூடும்
இந்த எண்ணத்தின் கருகூட
ஒரு காலித்திண்ணை
எனக்களித்த
ஞானப் பிச்சை என்பதை
உணர்ந்து கொள்வதே
என் தேடலின் சுகம் !

Abu Haashima

No comments: