Thursday, May 18, 2017

✒நலம் நலமறிய ஆவல்✒

✒நலம் நலமறிய ஆவல்✒
................................................
மேற்சொன்ன அவ்வாசகம் எத்தனை பேருக்கு பரீட்சையமானதோ என்னவோ எனக்கு பல ஆண்டுகள் என் வாழ்வில் நிறைந்து நின்ற ஒன்று. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதிலும் குறிப்பாக என் தந்தை அவர்களுக்கும் எழுதிய எல்லா கடிதங்களிலும் இந்த வாசகமே பிரதானம்.
இன்று கடிதம் எழுதுவது என்பது உறவுகளிலும் நட்பு வட்டங்களிலும் அற்றுப்போன ஒன்றாக இருக்கலாம் ஆனால் என் பள்ளி கல்லூரி நாட்களில் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருப்பவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள இதுமட்டுமே பிரதான வழி. இன்று காலசக்கரத்தின் சுழற்சியால் கடிதங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. காலம் மாறி காளன் வரும்வரை வரும் எல்லா மாற்றங்களையும் ஆமோதித்து அனுமதித்தே ஆகவேண்டும் என்பது ஏட்டில் எழுதப்படாத நியதி!☺

நான் எப்படி வெளிநாட்டு வாசியோ அதுபோலவே நான் படிக்கும் காலகட்டங்களில் என் தந்தையும் வெளிநாட்டு வாசி குறைந்தது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என் தந்தை அவர்கள் எனக்கும் எனது தாய்க்கும் கடிதம் எழுதுவதுண்டு. பத்தாம் வகுப்பு படிக்கும் வரை ஒரே கவரில் எனக்கும் என் அம்மாவுக்குமான கடிதம் இருக்கும். பிறகு பிளஸ் ஒன் போன பிறகு எங்கள் இருவருக்கும் தனித்தனி கவர் ஆனது. தந்தைக்கு தெரிந்தது தன் மகன் வளர்ந்துவிட்டான் என்று அதற்கான பிரைவஸி தான் அந்த தனிக்கவர் முறை.
எனக்கு எழுதப்பட்ட கடிதங்களில் அவரின் வெளிநாட்டு வாழ்க்கைமுறை இருக்கும் அதைவிட என் வாழ்வின் முறைப்பற்றி அதிகமான வினா இருக்கும். இப்படி படி, அப்படி படி என்றெல்லாம் இல்லாமல் தேவையான அளவில் மட்டுமே அறிவுரை இருக்கும் அந்த அறிவரைகளின் வழியே ஆயிரம் அர்த்தமும் இருக்கும். எனது கல்விநிலை கூடக்கூட அவர் எழுதும் குறைவான அறிவுரைகள் மேலும் குறைந்து சில வாசகங்களில் ஒருசில வார்த்தைகளில் முற்று பெற்றது.
இப்படி அவர் எழுதியதில் உனக்கு என்னவெல்லாம் வெளிநாட்டில் இருந்து வேண்டும் நான் வரும்போது கொண்டு வருகிறேன் என்பது அதிகமாக இருக்கும்; அவர் வரும்போது நான் எழுதிய அத்தனையும் கிடைக்கும்.
இதையெல்லாம் எழுதிய என் தந்தை தன் ஓய்வு காலத்தில் தனக்கு என்ன தேவை என்பதை ஒரே ஒரு கடிதத்தில் கேட்டிருந்தார் அது:
"மகனே...! நீ வளர்ந்து நாளை பலன் தரும் மரமாக நிற்கும் போது இந்த தந்தைக்கு அதன் சிறு பலனை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் அதன் நிழலில் இளைப்பாரும் உரிமையை மட்டும் கொடுக்காமல் இருந்துவிடாதே" 💖
மூன்றாம் வகுப்பைக்கூட முழுதாக தாண்டாத என் தந்தை தந்த திருவாசகமாக என்னுள் என்றும் நிறைந்து நிற்கிறது இந்த வரிகள்!
நலம் நலமறிய ஆவல் எழுத்தின் வழி இல்லாவிட்டாலும் கொண்ட எண்ணத்தின் வழி என்றும் தொடர்கிறது.


Samsul Hameed Saleem Mohamed

No comments: