Saturday, June 17, 2017

பெயரில் என்ன இருக்கிறது? எவ்வளவோ!

Shahjahan Rahman
குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். நல்ல பெயராக நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்பார்கள். சிலர், குறிப்பிட்ட எழுத்தில் துவங்குகிற பெயரைப் பரிந்துரைக்குமாறு சொல்வார்கள். சிலர், இன்ன பெயர் வைக்கலாம் என்று விரும்புகிறேன், கருத்துக் கூறுங்கள் என்று கேட்பார்கள். இதைப்பற்றி யோசிக்கும்போது பல விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான் என்பது ஷேக்ஸ்பியரின் வாதம். ஆனால் பெயரில் எவ்வளவோ இருக்கிறது என்பது சாதியக் கட்டுமானம் கொண்ட நமது சமூகத்தில் எதார்த்தம்.



அன்றைய சில விஷயங்களை இப்போது யோசித்தால் வியப்பாக இருக்கிறது. நான் வளர்ந்த மடத்துக்குளத்தில், எங்கள் வீட்டுக்கு மேற்கே இருந்த பகுதி கொடிக்காத் தெரு என்று அழைக்கப்பட்டது. வெற்றிலைக் கொடிக்கால் போடும் தொழிலில் ஈடுபட்டிருந்த பாண்டிய வேளாளர் சமூகத்தினர் வசித்த பகுதி. அவர்களில் பலருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள் இருக்கும். அங்கே வசித்துவந்த - அண்ணா என்று எங்களால் அழைக்கப்பட்ட அண்ணாதுரைக்கு - தம்பி பிறந்தபோது, ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவன் என்பதால், என் அக்காக்கள்தான் அவனுக்கு “சுதந்திர ராஜ்” என்று பெயர் வைத்தார்கள்.

எனக்கு ஷாஜஹான் என்று பெயர் வைத்த கதை இன்னும் சுவையானது.

நான் பிறந்தபோது, எங்கள் ஊரில் இருந்த ஒருவர் எனக்கு ஜாதகம் எழுதி வைத்தார். முஸ்லிம்களில் ஜாதகம் எழுதும் வழக்கம் இல்லை, இது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால் அவரோ, ஜாதகம் எழுதுவது தவறில்லை என்பதற்கு பல விளக்கங்களை அரபியிலும் தமிழிலும் முதலில் எழுதி விட்டுத்தான் என் ஜாதகத்தையே எழுதியிருக்கிறார். நானோ என் குடும்பத்தினரோ அந்த ஜாதகத்தை நம்பவில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் அது நொறுங்கிப்போகும் தாள்களாய் இப்போதும் என் கைவசம் இருக்கிறது. அந்த ஜாதகத்தின்படி என் பெயர் - சையத் பத்ருத்தீன். பிறகு ஷர்ஃபுதீன் என மாற்ற யோசித்தார்கள். பத்ருத்தீன் எப்படி ஷாஜஹான் ஆனான் என்பது சுவையான கதை. நீங்கள் வேறு யார் வாழ்க்கையிலும் கேள்விப்படாத கதையாக இருக்கலாம்.




அப்பா ஆசிரியராக இருந்தார். அதிகமாகவே மதிக்கப்பட்ட, அதற்குத் தகுதியும் கொண்ட ஆசிரியராக இருந்தார். அவரிடம் ஏராளமான மாணவர்கள் தனிக்கல்வி பெற வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் எல்லாருமே இந்துக்கள். எங்கள் குடும்பத்தில் ஜாதி-மத வேறுபாடுகள் பார்க்கப்படுவதில்லை என்பதை என் எழுத்திலிருந்தே நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அப்படி வீட்டுக்குக் கல்வி பயில வந்த மாணவர்களுக்கு சையத் ஷர்ஃபுதீன் என்ற பெயர் உச்சரிக்கக் கடினமாக இருந்ததாம். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் ஷாஜஹான் என்ற பெயர் இடம் பெற்றே தீரும். ஜாஜகான், ஜார்ஜஹான், சாசகான், சாசஹான், ஸாஜகான், சார்ஜகான், சாஜஹான், ஷாஹே ஜஹான் என எப்படி தப்பாக உச்சரித்தாலும் ஷாஜஹான் அவர்களுக்கெல்லாம் தெரிந்த பெயர்தானே... ஆகவே அவர்கள் ஷாஜஹான் என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். கடைசியில் பெற்றோரும் பள்ளியில் சேர்க்கும்போது ஷாஜஹான் என்றே பதிவுசெய்து விட்டார்கள்.

இன்று...? எனக்குத் தெரிந்த ஈரோட்டுக் கவுண்டர்கள் குடும்பத்தில் ஷிவானி, தர்ஷன் என்று பெயர்கள். தில்லியில் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருக்கிற சமூகத்தின் ஒரு தமிழ்க் குடும்பத்தில் இரண்டு பெண்கள் - சோனியா, மோனியா. இதுபோல இன்னும் பல விந்தையான பெயர்களையும் பார்க்கலாம்.

இந்த மாற்றம் எங்கிருந்து வந்தது. இதுபோன்ற பெயர்கள்தான் மாடர்ன் என்ற கருத்து நமக்குள் எப்படி நுழைகிறது. தொலைக்காட்சி உபயம். பொருளாதார நிலையில் நம்மைவிட மேலே இருக்கிறவர்களை - நவீனமானவர்கள் என்று கருதுகிறவர்களை - எட்ட முடியவில்லை என்றாலும், இப்படிப் பெயர் வைப்பதிலாவது நாமும் நவீனமடையலாம் என்று நினைக்கிறோம். கிராமப்புறங்களில் தலித் என்பதற்காப் புறக்கணிக்கப்படும் சமூகத்தினர் நவீனப் பெயர்களை சூட்டிக்கொள்ளும்போது, அவர்கள் நகரங்களுக்கு நகரும்போது தலித் என்ற அடையாளம் பெருமளவுக்கு மறைந்து போகிறது என்பது ஒரு சாதகம். மற்றபடி, பொதுவான வழக்கம் என்னவென்றால், நமக்குக் கிடைத்திராத வசதிகளை எல்லாம் நம் குழந்தைகளுக்குக் கொடுக்க நினைக்கிறோம். அதேபோல, நமக்குப் பிடித்த விஷயங்களை நம் குழந்தையில் திணிக்கவும் விரும்புகிறோம். பிள்ளை இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது கடைசிக்கட்டம். பெயர் வைப்பது முதல் கட்டம்.

20-30 ஆண்டுகள் முன்பு வரையில் குழந்தைக்குப் பெயர் வைப்பது என்பது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆணாக இருந்தால் தாத்தாவின் பெயர், பெண்ணாக இருந்தால் பாட்டியின் பெயர். இதுதான் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வழக்கமாக இருந்தது. பிற்பாடு, நட்சத்திரங்கள், கிரகம், ராசி, எண் கணிதம், ரசனைகள், மொழி ஆர்வம், எனப் பலவும் தாக்கம் செலுத்தத் துவங்கி விட்டன. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மூட நம்பிக்கைகளுக்கு தூபம்போட, வியாபாரிகள் கொழிக்க, பெயர் வைப்பதில் பல்வேறு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும் வழக்கம் துவங்கி விட்டது. இந்தக் குழந்தைக்கு இந்த எழுத்தில் துவங்கும் பெயர் வைக்க வேண்டும் என்பதான நம்பிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்குவதில் நான் இறங்க விரும்பவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு, நடப்புக்கு வருகிறேன்.

இன்று நாம் சூட்டுகிற, அழகாகத் தெரிகிற பெயர், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதையும் யோசித்துப் பெயர் வைப்பது நல்லது. அதற்காக, பொதுவில் வழக்கில் உள்ள பெயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் சூட்டவிரும்பும் பெயரை பல விதமாக உச்சரித்துப் பாருங்கள், பிள்ளையின் சிறு வயதிலும், இள வயதிலும், கல்லூரிக் காலத்திலும் அந்தப் பெயர் எவ்வாறு உச்சரிக்கப்படும் என்று யோசித்துப் பாருங்கள். வழக்கத்துக்கு மாறாக இருக்கிற பெயரால் சக நண்பர்களால் கேலி செய்யப்படும் ஆபத்து இருக்கிறதா, அதன் காரணமாக பிள்ளை மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.

இது உலகமயமான உலகம். பிள்ளை தமிழ்நாட்டில் மட்டுமே வசிக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்தியாவின் பிற பகுதிகளிலோ, வெளி நாடுகளிலோ வசிக்க நேருமானால் நீங்கள் சூட்ட இருக்கும் பெயர் பிள்ளைக்கு வசதியாக இருக்குமா என்று யோசியுங்கள்.

நண்பர் ஒருவர் தன் மகனுக்கு யூரி ககாரின் என்று பெயர் வைத்திருக்கிறார். யூரி ககாரின் முதல் விண்வெளி வீரர், ரஷ்யர். எனவே, புகழ் பெற்றவர். அந்தப் பெயரை அனைவரும் அறிந்திருந்தால் பிரச்சினை இல்லை. பலருக்கும் தெரியாதபோது, பெயர் விந்தையாகத் தோன்றும். இன்னொரு நண்பர் தன் மகளுக்கு வியட்நாம் என்று பெயர் வைத்திருக்கிறார். வியட்நாமில் அமெரிக்கா தோல்வி கண்ட ஆண்டில் பிறந்தவர் என்பதால் அந்தப் பெயர். அவர் கம்யூனிஸ்ட் என்பதாலும், மகளும் கம்யூனிச சிந்தனையில் வளர்நதவர் என்பதாலும் பிரச்சினை ஏதுமில்லை. இன்னொரு பெயர் கேரளகுமாரி. பேஸ்புக்கில் நட்பில் இருக்கிறார். தோழர் நல்லகண்ணுவின் மைத்துனி. கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த நேரத்தில் பிறந்தவர் என்பதால் அந்தப் பெயர். கம்யூனிஸ்ட் தந்தை - மருதன்வாழ்வு அ.க. அன்னச்சாமி என்பதால் அவருக்கு சங்கடம் ஏதுமில்லை. இப்படி சித்தாந்தப் பிடிப்புடன், அல்லது கட்சித் தலைவர் மீதான ஈர்ப்புடன் பெயர் வைத்தபிறகு, பிள்ளை வளரும்போது வேறு சித்தாந்தத்தில் ஈர்ப்புக் கொண்டு விட்டால், அது அவருக்கு தர்மசங்கடமாக இருக்கும். பெயர் சூட்டும்போது இதையும் கருத்தில் கொள்வது நல்லது.

முக்கியமாக ஒரு விஷயம். குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெரும்பாலும் ஆண்தான் முடிவு செய்கிறான். உண்மையில் குழந்தைக்காக அனைத்தையும் தாங்கி பெற்றுத் தருபவள் பெண்தான். ஆனால் பெயர் வைப்பதில் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை. கல்வியறிவு / வெளி உலகத் தொடர்பு இல்லாத, கிராமப்புற வாழ்க்கையாக இருந்த வரையில் இது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் இப்போது உலகம் சுருங்கி விட்டது. பெண்ணுக்கும் பல விவரங்கள் தெரியும், தன் பிள்ளையின் பெயரைப் பற்றி அவரும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கலாம். எனவே, அவருடனும் ஆலோசனை செய்யுங்கள். அவருடைய கருத்துக்கும் மதிப்பளித்து பெயர் சூட்டுங்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தால் பெற்றோருடனும் ஆலோசனை பெறலாம். குறைந்தபட்சம், அவர்களுடைய கருத்தையும் கேட்டறிந்து செய்ததுபோல நாடகமாவது ஆடுங்கள்.
பதிவர் 


Shahjahan Rahman 
நன்றி :Source http://pudhiavan.blogspot.in/2017/05/blog-post_8.html

No comments: