Sunday, June 4, 2017

அற்ப_துனியா(உலகம்)

 அற்ப_துனியா(உலகம்)
மேலே உள்ள இந்த வார்த்தையை இதுவரை கேட்டிறாது ஒரு இஸ்லாமியர் கூட இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பள்ளிதோறும் முழங்கும் வெள்ளிமேடைகளிலும் இன்னபிற இஸ்லாம் சார்ந்த நிகழ்வுகளிலும் இன்றளவும் இதுவே பிரதானப்பட்டு நிற்கிறது இமாம்கள் எனும் மத குருமார்களின் பிரசங்கங்களில் ஆனால் அவர்கள் கூற்றுப்படியே இந்த அற்ப உலகத்தில் நமக்கானதாக எதை தேர்ந்தெடுத்துக்கொண்டு எப்படி வாழ்வது என்பதில் கிடைக்கும் தெளிவு என்பது குறைவிலும் மிக குறைவு.
இந்த பெரியார் இப்படி இருந்தார், அந்த பெரியார் அப்படி வாழ்ந்தார், இமாம் ஹசன் பஸரி, மாலிக் இப்னு தீனார், ராபியத்துல் பஸரியா, உவைஸ் கருணி, முகைய்யதீன் அப்துல் காதிர் ஜெய்லானி மற்றும் எத்தனையோ பெரியார்களைப்பற்றி சுவாரஸ்யமான அழகான கதைகள் எல்லாம் இன்றளவும் நில்லாது ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த கதைகளை கேட்ட சமுதாயம் இவைகளால் என்ன பலனை அடைந்தது என்று இதுவரை தெரியவில்லை.

இன்றைய காலத்தின் கட்டாயமாக கருதப்படும் கல்விமுறை பற்றி என்ன விளக்கங்களை அவர்கள் சமுதாயத்திற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு தெரியாவிட்டாலும் அத்தகைய வழியில் கற்றுத் தேர்ந்த கல்வியாளர்களை கொண்டு என்ன விதமான விளக்க குறிப்புகளை கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் அதுவும் கூட குறைவான நிலையிலேயே இருக்கும் அல்லது இல்லாமல் கூட போகலாம்.
முதலில் இந்த உலகத்தில் செம்மையாக வாழ வழி என்னவோ அதைப்பற்றியான அறிவு சமுதாயத்திற்கு அவசியத்திலும் அவசியம்! கண் இல்லாத மனிதர் கூட கல்வி கற்றாலே முன்னேற முடியும் என நினைத்து அதற்காக முயலும்போது நம் சமுதாயம் இன்னமும் மேடைதோறும் அற்ப துனியா என்று மூளை மழுங்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தால் அதனால் விளையப்போவது வெறும் முட்டாள் கூட்டம் மட்டுமே!
ஆங்கிலம் ஹராம் என்றும் வெள்ளையனின் கல்வி தேவையில்லை என்றும் சுதந்திர காலத்தில் வீர வீண் வசனம் பேசி ஃபத்வா கொடுத்ததன் விளைவை சமுதாயம் இன்றுவரை சுவைத்து கொண்டிருக்கையில் இன்னமும் அற்பம் சொற்பம் என்று அடுக்கு மொழி பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை.

Samsul Hameed Saleem Mohamed

No comments: