Wednesday, June 21, 2017

திருமணமென்பது,

திருமணமென்பது, இருவர் இச்சமூக உடன்படிக்கையின்படி பரஸ்பரம் தங்கள் உடலையும், மீதமிருக்கும் வாழ்நாட்களையும் ஒப்படைக்கும் சடங்கு. அதற்கு பின்னாக இருவரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ப்ரியங்கள் அனைத்தும் ஒன்று கலந்து பெரும் பிரவாகமாய் புரிதலுடனுன் கூடிய தெள்ளிய காதல் இழையோடத் துவங்கும் பொழுதுதான் விலைமதிப்பில்லாத மனது மானசீகமாக ஒப்படைக்கப் படுகிறது.

அப்படியானதொரு அதீதப்புரிதலை, அன்பை, காதலை, ப்ரியங்களை இறைவன் எனக்களித்த தினமின்று.
புல் முளைப்பதையோ, பூ மலர்வதையோ பார்த்து அதிசயத்து அந்த கணத்தில் மூழ்கி லயித்துப் போய்விடுபவன் நான். நாளை நம் கனவு வீட்டின் தோட்டத்தில் என்ன பூக்கள் மலர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தொலை நோக்குபவள் அவள். இறைவனின் அதிசயம்தான் எத்தனை? எத்தனை? இதைப்போன்றவளை என்னில் சரிபாதியாக பொறுத்தி விடவில்லையென்றால் நான் லயித்து நிற்கும் ஏதோவொரு கணத்திலேயே அப்படியே தேங்கி நின்றிருந்திருப்பேனே?
ஒரு தோல்வியோ, தவறோ அல்லது வெறுமையோ சூழ்ந்திருக்கும் கணங்களில் தாயின் மடி தேடி தலை சாயும் பொழுது, தலை கோதி ஆசீர்வதித்து அனுப்பும் அன்னை மடியின் அதே வாசனை இவளது மடிகளிலும். இன்னும் சொல்லப்போனால், மொத்த பெண்ணினத்தின் மீதான பிரமிப்பு குறையாததற்கு காரணம், ஒன்று என் தாய். மற்றொன்று இவள்..
எட்டு வருடத்தை தொட்டுப்பிடித்தும், வரப்போகும் நாட்களில், இன்னும் என்னென்ன பிரம்ம ரகசியங்களையும் அதிசயங்களையும் எனக்கருளப் போகிறாளோ என்ற சுவாரஸ்யத்திலேயே நகர்கிறது எஞ்சியிருக்கும் என் வாழ்நாட்கள்...
#லவ்_யூ_சோ_மச் Yasmin ❤️


ராஜா முகமது சீன தேசத்திலிருந்து

No comments: