Friday, August 18, 2017

வளைகுடாவில் வாங்கிய காகிதத்தில்...

#தமிழ்முஸ்லிம்
உண்மையில் இது கவிதையல்ல நான் என் மகளுக்கு எழுதி அனுப்பிய முதல் கடிதம். ஒரு ரோஜா நிற காகிதத்தில் மை பேனாவால் எழுதி சவுதி அரேபியாவில்லிருந்து அனுப்பினேன். இப்போதும் வாசித்து நெகிழ்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வுதேடி பாலைவனம் வந்த ஒரு தந்தையின் வலிகளைப் படம்பிடித்துக் காட்டும் காட்சிப்பேழை இது. எங்கோ இருந்து கொண்டு தன் சுற்றங்களுக்காக உழைக்கும் முகம் தெரியாத பல அப்பாக்களுக்கும் சகோதரர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.
பனிரோஜா வம்சத்தின்
ஒற்றை இளவரசியைப் போல்
பிறந்த என் மகளே மகளே
நலமா நலமா
நீ
பிறந்த
பொற்பொழுதான
அப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்
முதல் பிறந்த நாளான
இப்பொழுதும்
நானுன் அருகிலில்லை
உன்னை மறந்தல்ல
நான் இங்கே வாழ்கிறேன்
உன் நலன்
நினைத்துத்தான்
நான் இங்கே தேய்கிறேன்
மூடிவைத்த
மின்னலொளிப் பூவே
என்
மனப்பூ வெளியெங்கும்
உன் சிரிப்பூ மகளே
என்
நினைப்பூப் பரப்பெங்கும்
உன் விழி துருதுருப்பூ
மகளே
உன் தாய்தரும் பாலிலே
பாசமுண்டு
உனக்கென இங்கே
நான்விடும் கண்ணீரிலே
என் உயிருண்டு
உன் மொழியை
எழுத்தாய் எழுதும்
கலையை நான் அறிந்திருந்தால்
நம்மூர் அஞ்சலகம்
என் கடிதங்களால் மூழ்கிக்
காணாமல் போயிருக்கும்
அடக்கி அடக்கி வைக்கும்
என் கொஞ்சல்கள் பீறிட
ஈரமாகும் காற்றலைகள்
ஏழுகடல் தாண்டும்
உன் பஞ்சுமேனியைத்
தீண்டும்
நீ வீரிட்டு அழுதால்
உன் அன்னை
வேதனை கொள்வாள்
அவளுக்குப் புரியாது
என் உணர்வுகளின் அதிர்வுகள்
உன் தேன்கன்னம் தொட்டுக்
கிள்ளிவைக்கும் இரகசியம்
பொன்
மகளே மகளே
நலமா நலமா
உன் கால் உதைக்கும் நெஞ்சில்
கவலை உதைக்கும் வரத்தை
நான் வாங்கிவந்திருந்தாலும்
தேனவிழ்க்கும் பூப்பிஞ்சே
உனை நான்
தேடிவரும் நாளொன்றும்
தூரத்திலில்லை
நீ பிறந்த இந்த நாளில்
வானில்
எத்தனை நட்சத்திரங்களோ
உனக்கு என் அத்தனை
முத்தங்கள்

அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in/

No comments: