Saturday, August 12, 2017

அப்படி என்னதான் இல்லை கவிதையில்?

தும்பி துரத்தும் சிறுவயதை
திரும்பிப் பார்ப்பது கவிதையடா
வம்பு வளர்த்த வாலிபத்தை
வரைந்து காட்டலும் கவிதையடா
தெம்பு உணர்த்தும் நட்புகளை
தேவதை ஊட்டிய காதலினை
நம்பிக் கேட்போம் கவிதையிலே

நாமும் அதனிடை நின்றபடி.
அரக்கம் மிக்க அரசியலர்
அறியா மக்கள் கொடுமைகள்
இரக்கம் இல்லா கொடியோரும்
இழிந்த குணத்தார் எல்லோரும்
திருந்த வைக்கும் சாட்டையெனத்
திகழும் கவிதை இருக்கிறதே.
பரந்த வெளியில் பொருள்காணின்
பண்பா டோங்க வைப்பதுவே
அழகைப் பேசும் கவிதையென்றால்
அன்பின் ஒளியை வளர்த்திருக்கும்
பழக வைத்துப் பாகுபாட்டைப்
பதமாய்க் களைய அறிந்திருக்கும்
வழங்கும் கவிதை அறியாதோர்
வாழ்வும் இழப்பே இழப்பென்பேன்
உழவுத் தொழிலாம் கவித்தொழிலும்
உள்ளம் வயலாய் அமைவோர்க்கே.
அறத்தில் குறைவு செய்வோரை
அறைந்து தடுக்கும் கவிதைகளே.
முறத்தால் புலியைத் துரத்திவிடும்
முனைந்து காக்கும் மனமதுவாம்.
சிறப்பாய்ச் செய்யும் எச்செயலும்
சிந்தை விளைக்கும் கவிதைகளே
பிறப்பு இறப்பு இரண்டிற்கும்
பெரிய பாலம் கவிதைகளே.

இப்னு ஹம்துன் Fakhrudeen Ibnu Hamdun

No comments: