Wednesday, August 9, 2017

இரவல் தந்தவன் கேட்கின்றான் -

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?//
கவியரசர் கண்ணதாசன் எழுப்பிய வினாவுக்கு விளக்கம் கேட்டிருந்தார் என் அன்பு இளவல் Gopala Krishnan..
அவர் குறிப்பிட்ட அந்த பாடல் வரிகள் எனக்கு பலதரப்பட்ட சிந்தனையை தூண்டி விட்டது.
இஸ்லாமியர்களாகிய நாங்கள் யாரேனும் இறந்ததைக் கேள்வியுற்றால் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" என்று மொழிகிறோம்.
இதன் உட்பொருள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே அது மீண்டு விட்டது என்பதாகும் .

ஆம். இரவல் தந்தவனே எடுத்துக் கொண்டான் என்பதுதான்.
மனிதனிடம் இரவல் பெற்றால் அது தரமுடியாது என்று சொல்லி விட முடியும். இறைவனிடம் அந்த "பாச்சா" பலிக்காது. இரவல் கொடுத்ததை எப்போது அவன் எடுத்துக்கொள்ள நினைக்கிறானோ அப்போது அவனே எடுத்துக் கொள்வான். அதை யாராலும் தடுக்க முடியாது. அவன் அதற்கு யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை.
"இரவல்" என்பது கடனாக பெற்றுக் கொண்டு, வந்ததை சிறிது காலத்திற்கு பயன்படுத்தி விட்டு, திருப்பிக் கொடுக்க வேண்டிய பொருள். இந்த உண்மையை ஒருவன் புரிந்துக் கொண்டால் அவன் தன் வாழ்நாளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வான்.
சித்தர் பாடல்களிலிருந்து கண்ணதாசனுக்கு இந்த கருத்து கிடைத்திருக்கக்கூடும்.
"கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி-மானே!
படைத்தவனே, பறித்துக் கொண்டாண்டி"
என்ற பாடல் வரிகள் இதற்கு நல்ல உதாரணம். சித்தர்களின் கருத்தை எடுத்து எளிய தமிழில் திரைப்படப் பாடல்களில் கையாள்வது என்பது கண்ணதாசனுக்கு கைவந்த கலை.
“காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்......
“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தையும்..... எல்லோருக்கும் புரிகின்ற எளிய மொழியில்
“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”
என்று கண்ணதாசன் பாடியிருப்பான்.
//உறவைச் சொல்லி அழுவதினாலே
உயிரை மீண்டும் தருவானா..?// என்று அப்பாடலில் வரும் வரிகள், மேலே நான் குறிப்பிட்ட குணங்குடியாரின் சிந்தனைக்கு ஒத்துப் போகிறது.
கூக்குரலாலே கிடைக்காததும், அந்தக் கோட்டைக்கு போனால் திரும்பாததும்தான் அந்த "இரவல்" சாதனம்.
#அப்துல்கையூம்

No comments: