Sunday, September 24, 2017

அன்பின் அழகிய மகள்

==ரமீஸ் பிலாலி==

அன்பின் அழகிய மகள்

தமிழின் அதி சிறந்த அறநூல் திருக்குறள். அதில் தமிழ் என்னும் சொல்லே இல்லை! யாரோ ஒரு புண்ணியவான் எழுத்தெண்ணிப் படித்து இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இரவெல்லாம் அமர்ந்து ஒவ்வொரு குறளாக விடிய விடிய ஆய்ந்து அதில் வெண்பா இலக்கணம் எவ்விடத்தும் பிழைபடவில்லை என்று கண்டறிந்தாராம் வைரமுத்து. ’தேவையா இந்த வேலை?’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதனால், வெண்பா எழுதும் திறன் அவருக்குக் கைவந்ததாம்.


அடியேனும் இன்று திருக்குறளில் ஒரு தன்மையைக் கண்டுபிடித்தேன். கடின உழைப்பால் அல்ல. மிகவும் எளிதாக. இணையம் என்னும் ‘ஜின்’னின் ஒத்தாசை இருக்கிறதே!

’அன்பு’ என்று தொடங்கும் அல்லது முடியும் கவிதை ஒன்று, ஐந்து நிமிடத்திற்குள் அவசரமாக வேண்டும் என்று அழைத்தார் நண்பர் ஒருவர். இணையத்துள் நுழைந்து திருக்குறளில் தேடும்படி கணினிக்கு ஆணையிட்டேன். ‘ஆலம்பனாஹ்! இதோ’ என்று அது அள்ளி வந்ததில் பதினொரு குறள்கள் இருந்தன. ”சரி, அன்பு என்று முடியும் குறள்” என்று ஆணையிட்டேன். ’இல்லை’ என்று பதில் வந்தது. “அடடே! திருக்குறளில் அன்பு என்று எந்தக் குறளும் முடியவில்லை”. ஆய்வு செய்து நான் இதைக் கண்டுபிடித்ததாகப் பீற்றினால் என் மனசாட்சியே என்னை மன்னிக்காது.

‘அன்பு என்று தொடங்கும் குறள்கள் பதினொன்று உள்ளன. ஆனால், அன்பு என்று ஒரு குறளும் முடியவில்லை. ஏன் தெரியுமா? அன்பிற்கு முடிவே இல்லை! என்று வள்ளுவர் சொல்ல வருகிறார்’ என்று நான் ஏதாவது மேடையில் பேசினால் கைத்தட்டல்கள் கிடைக்கலாம். ஆனால், வள்ளுவரின் ஆன்மா என்னை மன்னிக்காது! (தர்க்கம் இடிக்கிறதே? அறம் என்று முடியும் குறள் உண்டு. அப்படியானால் அறத்திற்கு முடிவு உண்டா?)

தோழருக்கு அக்குறட்பாக்களின் எண்களை அனுப்பினேன். ‘இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டது. புதிய கவிதை வேண்டும். ஐந்து வரிகள் போதும். உங்களுக்கு இரண்டு நிமிடம் ஆகுமா? எழுதி அனுப்புங்களேன்” என்று அன்புக் கட்டளை இட்டார். ஆங்கிலத்தில் தட்டி வாட்ஸப்பில் அனுப்பினேன், இப்படி:

என் அன்பே!
என்று அழைப்பது எப்படி?

அன்பு
எனதும் அல்ல
உனதும் அல்ல

அன்பின் உடைமை
அல்லவோ
நீயும் நானும்?

’ஆஹா! கவிதை கவிதை’ என்று சிலாகித்து குறுஞ்செய்தி அனுப்பினார் தோழர். தொடர்ந்து, ஊறும் மணற்கேணி போல் அன்பைப் பற்றிய எண்ணங்கள் மனக்கேணியில் சுரந்து வந்தன.

“வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை” என்பது பாரதியின் வாக்கு. இவ்வரி தோன்றியபோது பாரதியைச் செல்லமாகச் சீண்ட நினைத்தேன். திரைப்பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதலாம் போல் இப்படி எழுதினேன்:

“அன்பே சிறந்த தவம்
என்கிறான் பாரதி
அன்பே சிறந்த வரம்
என்று நீ கூறடி!”

இன்னொரு சிந்தனை. அவனும் அவளும் பால்ய வயதில் அன்புடன் பழகியவர்கள். காலம் செல்ல, அவள் பருவமடைகிறாள். முன் போல் அவளை அவன் பார்க்கவியலாது. அவள் பர்தா என்னும் திரை அணிந்துகொள்கிறாள். ஆனால் அந்த அன்பு அகத்தில் மெல்ல மெல்லக் காய்ச்சப்பட்டுக் காதலாகிவிடுகிறது. இனி அவளை அவன் மணம் செய்தால்தான் முன்பு போல் உரையாட முடியும். இந்தப் பின்னணியில் அவன் சிந்திப்பதாக ஒரு குறுங்கவிதை:

அன்பைப் போல்
அத்தனை வெளிப்படையாய்
இருப்பதில்லை காதல்

ருதுவடைந்த அன்புதான் காதலோ?
அதனால் அது
திரை அணிகின்றதோ?

அன்பு எனும் சிறுமி பருவமெய்திக் கன்னியாய் ஆனதே காதல் என்று நான் உருவகம் செய்கிறேன் என்றால், அந்த அன்பு ஒரு தாயாகிக் கருவுற்றுப் பிள்ளை பெறுவதாக உருவகம் செய்து வியக்க வைக்கிறார் வள்ளுவர். அன்பின் குழந்தை எது? அருள் என்கிறார் அவர். “அருள் என்னும் அன்பீன் குழவி” என்பது அவர் வாக்கு.

குழவி என்றால் கைக்குழந்தை. அருளைக் குழவி என்று சொன்னதில் நுட்பமான உட்பொருள் உள்ளது. கரு தரித்துத் தங்கி குழந்தை பிறப்பதே பெரும்பாடு. அதுபோல் அன்புள்ள மனதில் அவ்வன்பு அருளாய் மாறுவதே அபூர்வம்தான். எனினும் அன்பு அருளாக மாறும் கணங்களை அவ்வப்போது ஒவ்வொரு மனிதனும் அடையவே செய்வான். ஆனால், அந்த அருளை வளர்த்தெடுப்பது, நிலைக்க வைப்பது மிக மிகக் கடினமான செயல். அது குழவியை வளர்த்தெடுப்பது போன்றது. தொடர்ந்து தாய் அதற்குப் பாலூட்ட வேண்டும். நோய் தாக்காது கவனிக்க வேண்டும். நோயுற்றால் தக்க மருந்து கொடுத்துக் காக்க வேண்டும். இப்படித்தான் அருளையும் வளர்க்க வேண்டியுள்ளது. அபூர்வமாக அகத்தில் அரும்பும் அருளுணர்வை மனிதர்கள் அனாதையாக விட்டுவிடுகிறார்கள். அதனை வளர்ப்போரே புனிதர்கள் ஆகிறார்கள்.

இன்னொரு சிந்தனை: “அன்பு தாய்; அருள் அதன் மகள். அன்பு அழகானதுதான், மாதவியைப் போல. ஆனால் அவளின் மகள் அவளைவிட அழகி, மணிமேகலையைப் போல.”

இந்தச் சிந்தனையை விரித்துக்கொண்டே போனபோது அதுவே அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் போல் அர்த்தங்களை அள்ளி வழங்கியது.

அன்பைப் பற்றி அதிகமாக எழுதுகிறார்கள். ஆனால் அருளைப் பற்றி அவ்வளவு எழுதப்படுவதில்லை. சிலம்பில், மாதவியின் அழகை இளங்கோ பாடிய அளவுக்கு, மணிமேகலையின் அழகை அவள் பெயரால் அமைந்த காப்பியத்தில் சாத்தனார் பாடவில்லை. எனினும், சுருக்கமாக ஒரு வரி சொல்கிறார். அதில் அவள் உலகின் மிகச் சிறந்த அழகியாகத் தோன்றுகிறாள்:

படையிட்டு நடுங்கும்
காமன் பாவையை
ஆடவர் கண்டால்
அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ
பெற்றியின் நின்றிடின்?

அதாவது, இளமையின் அழகு செழித்த அவளைப் பார்த்தால் அதன் பின் ஆடவர் அவளிருக்கும் இடத்தை விட்டு அகல்வார்களா? அவளைக் கண்ட பின்னும் தம் இயல்பு திரியாமல் அப்படியே நிற்பார்கள் எனில் அவர்கள் பேடிகளாகத்தான் இருக்க வேண்டும்’ என்கிறார் சாத்தனார்.

மாதவி தன் மகளான மணிமேகலையைத் துறவு நெறிக்குக் கொடுத்துவிட்டாள். ஒரு நாள் மணிமேகலை பூப்பறிப்பதற்காக மலர்வனம் சென்றாள். அப்போது அவ்வூர் மக்கள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து நின்று பார்க்கிறார்கள். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்து தன் அழகால் உள்ளங்களை உருக்கியவளான மாதவி தனது மகளை இப்படித் துறவி ஆக்கிவிட்டாளே என்று அவர்கள் வருந்தி, அப்படிச் செய்த மாதவி கொடியவள் அறிவற்றவள் என்று திட்டியதாகச் சாத்தனார் எழுதுகிறார்:

அணியமை தோற்றத்து
அருந்தவப் படுத்திய
தாயோ
கொடியவள் தகவிலள்

அன்பு நிலையில் மட்டுமே நின்றியங்கும் மக்கள் இப்படி வருத்தப்படுவது இயல்புதான். ஆனால் அருள் அதனைக் கருத்தில் கொள்ளலாகாது. காலம் செல்லச் செல்லத்தான் அருளின் உயர்வு அனைவர்க்கும் தெரியும்.

கலைகளில் சிறந்த மாதவிக்கு அமுதசுரபி கிடைக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த மணிமேகலைக்கே அது கிடைத்தது. அதுபோல், பல்வேறு உறவுநிலைகளால் இவ்வுலகை அலங்கரிக்கும் அன்புக்குக் கிடைக்காத ஞானம், அந்த அன்பின் வழிப் பிறந்த அருளுக்கே கிடைக்கிறது.

இன்னொரு சிந்தனை. மேற்சொன்ன திருக்குறளுக்கு வரையப்பட்டுள்ள உரைகள் தரும் வெளிச்சங்கள்.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்பதற்கு ”தொடர்பு பற்றாதே வருத்தம் உற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவது ஆகலின்...” என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர்.

அதாவது இன்னார் இனியார் எனப் பாராது உற்றார் உறவினர் அல்லார் மீதும் உண்டாகும் மெல்லுணர்வு (மேலுணர்வு) அருள். நம்முடன் தொடர்புடைய நபர்கள் மீது மட்டும் உண்டாகும் மெல்லுணர்வு அன்பு.

இவ்விரு பண்புகளும் இறைமைப் பண்புகள் என்று இஸ்லாம் காண்கிறது. எவ்வொரு செயலுக்கும் தொடக்க வாசகமாக அதில் சொல்லப்படுவது “பிஸ்மில்லாஹ் அர்ரஹ்மான் அர்ரஹீம்” என்பது. ”அல்லாஹ்வின் பெயரால்... அவன் அருளாளன் அன்பாளன்” என்பது அதன் பொருள்.

இதில் அருள் முதலிலும் அன்பு அடுத்தும் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் தன்னை ஏற்றாரையும் மறுத்தாரையும் நல்லாரையும் பொல்லாரையும் பாரபட்சமின்றி ரட்சிக்கிறான். இதுவே அருளாளன் எனும் நிலை. தனது அடியார்க்கு அவர்களின் பக்திக்கேற்ப அருட்கொடைகளை அவன் வழங்குகிறான். இதுவே அன்பாளன் என்னும் நிலை.

அன்பு என்னும் தாய்க்கு அருள் என்னும் குழந்தை பிறக்கிறது என்பது சரிதான். ஆனால் தந்தை யார் என்னும் கேள்வி தோன்றுகிறது அல்லவா? அறம் என்பதே அதன் தந்தை என்கிறார் மணக்குடவர். அதாவது, அறத்துடன் அன்பு சேரும்போது அருள் பிறக்கிறது.

இவ்வுலகில் அறம் செய்ய வேண்டும் என்றால் பொருள் (செல்வம்) வேண்டும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதும் அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதும் அவர் சொல்வதுதான். அதாவது, இவ்வுலகிலும் அருள் வேண்டும், ஆனால் அதற்குப் பொருளின் துணை தேவை என்கிறார். “இது பொருளுடையார்க்கே அறம் செய்தல் ஆவது கூறிற்று” என்று இக்குறள் பற்றி மணக்குடவர் விளக்குகிறார்.

பொருளுடையார் செய்யும் அறம் இரண்டு என்று இஸ்லாம் வகுத்தது. ஒன்று வறியார்க்குக் கட்டாயம் ஈதல் ஆன ஜக்காத். தானுவந்து தரும் தர்மம் ஆன சதக்கா.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்பதற்கு ஞா.தேவநேயப் பாவாணர் இன்னொரு விளக்கம் தருகிறார். “உயர்திணை மேலுள்ள அன்பு முதிர்ந்தவிடத்தே அஃறிணை மீது அருள் பிறத்தல் போல்...” என்கிறார்.

உயர்திணையான மக்கள் மீது மட்டும் காட்டுவது அன்பு. அதுவே, அஃறிணையான விலங்குகள் பூச்சிகல் தாவரங்கள் மீதெல்லாம் காட்டப்படும் எனில் அது அருள்.

“மானுட சமுத்திரம் நானென்று கூவு” என்றார் பாரதிதாசன். இது அன்பு.

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் பாரதி. இது அருள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றனார். இது அன்பு.

“யாதும் ஊரே யாதும் கேளிர்” என்றார் தேவதேவன். இது அருள்.
global spiritual garden வாட்சப்பில் வந்தது

No comments: