Thursday, October 19, 2017

40 "ரப்பனா! (எங்கள் இறைவனே!) துவா / 40 Rabbana Dua


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். [2:127]
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். [2:128]
எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக. [2:201]
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு  உதவி செய்வாயாக. [2:250]

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே. [2:286]
எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே. [2:286]
எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!. [2:286]
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!  எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். [3:8]
எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில்  எங்களை நீ ஒன்று திரட்டுபவன். அல்லாஹ் வாக்கு மீற மாட்டான். [3:9]
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!. [3:16]
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள். [3:53]
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக. [3:147]
எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக. [3:191]
எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவுபடுத்திவிட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. [3:192]
எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; [3:193]
எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக. [3:193]
எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய். [3:194]
எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக. [5:83]
அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய். [5:114]
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம். [7:23]
எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!. [7:47]
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன். [7:89]
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக. [7:126]
இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக! [10:85-86]
எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை. [14:38]
எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக. [14:38]
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக. [14:41]
எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக. [18:10]
எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம் [20:45]
எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன். [23:109]
எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும். [25: 65-66]
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண்குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக. [25:74]
எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன். [35:34]
எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!. [40:7]
எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத்துணைகள், மற்றும் அவர்களது சந்ததிகளில் நல்லோரை நீ வாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வாயாக! நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன். அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! இன்று தீமைகளிலிருந்து நீ யாரைக் காத்து விட்டாயோ நீ அவருக்கு அருள் புரிந்து விட்டாய். இதுவே மகத்தான வெற்றி. [40:8-9]
எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக. [59:10]
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன். [59:10]
எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது, [60:4]
எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன். [60:5]
எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். [66:8]


No comments: