Wednesday, October 25, 2017

தோல்வியா ? அப்படின்னா என்னா ?

by Abu Haashima

எதிர்பாராத தோல்விகளால் அவன்
துவண்டு போனான்.
அழகாக நடந்த வியாபாரம் நஷ்டமடைந்தது. வாழ்க்கையின் உச்சத்திலிருந்தவன் பறவைகளின் எச்சத்தைபோல்
கீழே விழுந்தான்.
கீழே விழுந்தவனை யாரும் கைதூக்கி விடவில்லை.
அவர்களும் தங்கள் பங்குக்கு காலால் தேய்த்துக் கொண்டே சென்றார்கள்.
அவனை நம்பி கடன் கொடுத்தவர்கள் அவன் மானத்தை அவிழ்த்து அம்மணமாக்கினார்கள்.
கொலை செய்து விடுவதாய்
மிரட்டினார்கள்.
போலீசில் புகார் செய்தான்.
அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
தினம் தினம் அவமானப்பட்டு
அச்சப்பட்டு
அவனால் வாழ முடியவில்லை.

ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வலி அவன் முகத்தில் சித்திரம் தீட்டியது.
வறுமை அவன் குடும்பத்தை வாட்டியது.
தப்பிக்க முடியவில்லை.
இறுதியாக நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டு அதுவும் கிடைக்கவில்லை என்றால் உயிரை மாய்த்து விடுவது என்று முடிவு செய்தான்.
மறுநாள் ...
நண்பரை அணுகி எல்லாம் சொன்னான்.
" உதவுங்கள் ... நாளை இந்த துன்பத்திலிருந்து மீண்டெழுந்து நீங்கள் தந்த உதவியை திருப்பி விடுகிறேன் " என்றான்.
இவனுக்கு உதவி செய்யும் நிலையில் அவர் நிலைமையும் இல்லை.
என்னால் உதவ இயலாது என்றார்.
இவன் விரக்தியோடு எழுந்தான்.
" என்ன செய்யப் போகிறாய் " என்று
அவர் கேட்டார்.
"நீங்கள்தான் கடைசி நம்பிக்கை.
அதுவும் இல்லை என்றாகி விட்டது. இறப்பைத் தவிர வேறு வழியில்லை." என்றான்.
அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. முடிவாகச் சொன்னார்...
" ஒன்று செய்.. நீ தற்கொலை செய்து செத்துப்போனால் யாருக்கும் பிரயோஜனமில்லை.. நான் சொல்லும் இடத்திற்கு போ.
அங்கே ...
உனக்கு எவ்வளவு பணம் தேவையோ
அதைவிடக் கூடுதலாகத் தருவார்கள்.
அதற்குப் பகரமாக
உன் கண்கள் , மூளை, நுரையீரல் , இரண்டு கிட்னி, கல்லீரல் இன்னும் இதுபோல் உன்னிடம் நிறைய இருக்கிறது.
அவற்றை உன் மரணத்திற்கு பின்
எடுத்துக் கொண்டு அதற்கான
ஒரு தொகையை உன் குடும்பத்திற்கு கொடுக்கச் சொன்னால் அவர்கள்
கொடுத்து விடுவார்கள்.
சுமார் பத்து லட்ச ரூபாய் கிடைக்கும் "
என்று சொல்லி விட்டு ...
" அட முட்டாளே... நீ என்னிடம்ஒன்றுமில்லை..ஒன்றுமில்லை என்று புலம்புகிறாயே... இப்போது புரிகிறதா உன்னிடம் எத்தனை லட்சத்திற்கு சொத்து இருக்கிறது என்று ?"
என்று கேட்டார்.
செத்துப்போக முடிவெடுத்தவன் மூளையில் மின்னல் வெட்டியது. கண்களில் புதிய ஒளி . நண்பரின் கையை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டான்..
" இல்லை.. இல்லை.. இனி சாகும் எண்ணம் எனக்கு வராது.. இறைவன் தந்த அருள் இவ்வளவு என்னிடம் இருப்பதை அறியாத மூடன் நான். அவன் தந்த அருளை நான் அழிக்க மாட்டேன் .. வாழ்ந்து காட்டுவேன்..."
வாசலை நோக்கி நடந்தவனை
வாழ்க்கை வரவேற்றுக் கொண்டது.
@ வட்டிக்கும் தொட்டிக்கும்
அச்சப்பட்டு வாழ்க்கையைத்
தொலைப்பவர்கள்
ஒருகணம் சிந்தித்தால் போதும்.
உயிரை இழக்க மாட்டார்கள்.
வாழ்ந்து காட்டுவார்கள்.

Abu Haashima

No comments: