Sunday, October 29, 2017

தலைமுறைகளும் படிப்பினையும்.

மனிதனுக்கு வேண்டிய வாழ்வியல்கள் வழிகள் அத்தனையும் அழகியமுறையில் மார்க்கத்தில் போதிக்கப் பட்டிருக்கிறது என்பது நாம் யாவரும் அறிந்ததே. அறிந்துகொண்ட போதனைகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எவ்வாறு நம் வாழ்வில் செயல்படுத்துகிறோம் என்பதை ஒரு உதாரணத்தைக்கொண்டு பார்க்கலாம்.
அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
இளவயதில் நமக்கு மார்க்க கல்வியை போதித்த நம் பெரியோர்கள் சொல்லித் தந்தவைகளில் ஒன்றாவது:
'அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு தலைமுறையினரை அறிந்திருக்க வேண்டும்'.

அதாவது நபிகளாரின் தந்தையார், பாட்டனார் மற்றும் முப்பாட்டனாரின் பெயர்களை சொல்லித்தந்தனர், மனப்பாடமும் ஆக்கிக்கொண்டோம்.
அவ்வளவுதானா? இன்னும் உள்ளதாக? பரம்பரையை அறிந்துகொள்வதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்பதை கொஞ்சமாக தொட்டுப்பார்ப்போமா?
நாம், நபிகளாரின் பரம்பரையினரின் பெயர்களை அறிந்துகொண்டதுபோல நம் ஒவ்வொருவரும் நமது நான்கு தலைமுறையினரின் பெயரையும் தெரிந்து அவர்களின் குணநலன்களையும் தவறாது அறிந்து கொள்ளவேண்டும்.
சரித்திரம் முக்கியம் என்பதை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம்.
நம் நாட்டின், இனத்தின், மொழியின் சரித்திரத்தை அறிந்திருந்தாலே நமது பாரம்பரியத்தின் அருமை தெரியும். அவற்றை பழுதுபடாமல் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு தானாக நமக்கு வரும்.
அறிவியல்கூற்றுப்படி, மனிதனின் மரபணுவின் தாக்கம் ஏழு தலைமுறை வரைக்கும் இருக்கும். அதில் கடைசி நான்கில் வீரியம் அதிகம் இருக்கும். மனிதனின் குணநலன்கள் அவன் வளரும் சுற்றுச்சூழலாலும், கற்றுதெளியும் அறிவினாலும் மெருகூட்டப்படுகிறது என்பது கண்கூடு. ஆனாலும், பரம்பரையாக மரபணு மூலமாக நமக்கு வரும் குணநலன்கள் கட்டாயமாக வந்தேதீரும். அங்க அவயங்களும், நோய்நொடிகளும்கூட அப்படித்தான்.
நமது தந்தை, பாட்டன் மற்றும் முப்பாட்டனின் குணநலன்களை அறிந்திருந்தால் அவர்கள் கடந்துசென்ற கஷ்டநஷ்டங்கள் நமக்கு வராமல் முன்னேற்பாடாக இருந்து தவிர்த்துக்கொள்ளலாம், தோல்விகளில் இருந்து நம்மைநாமே விலக்கிக்கொள்ளலாம்.
அவர்கள் அடைந்த வெற்றியின் துறைகளை அறிந்து அவற்றில் நாம் கவனம்செலுத்தி முயற்சித்தால் வெற்றிமேல் வெற்றி அடைவது எளிது, மேலும் மிகவும் சாத்தியமானதே.
நமது மூதாதையர்கள் சொல்லித்தந்ததில் அர்த்தம் உள்ளது, அது முழுக்க முழுக்க உண்மையானது. கொஞ்சம் ஆராய்ந்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் நோக்கத்தையும் நாம் புரிந்துகொண்டு வாழ்வில் முயற்சித்து வெற்றியடையவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


ராஜா வாவுபிள்ளை

No comments: