Sunday, October 29, 2017

புகைத்தலும் செரிமான மண்டல நோய்களும்

Shahjahan R

புகைத்தலும் செரிமான மண்டல நோய்களும்

இதைப்பற்றி விளக்குவதானால் உடலின் சில அங்கங்கள் குறித்து விளக்க வேண்டும். அதாவது, வாய், குரல்வளை, உணவுக்குழல், மூச்சுக்குழல், சிறுகுடல், பெருங்குடல், செரிமான அமைப்பு மற்றும் இதர உறுப்புகள் அடங்கிய உணவு மண்டலம் குறித்துப் பார்க்க வேண்டும். படத்தையும் அதில் உள்ள பாகங்களையும் பாருங்கள். (ஏதோவொரு காலத்தில் பள்ளியில் படித்தது நினைவு வரக்கூடும்.) இதைப் படிக்கும் மருத்துவர்கள் தமது கருத்துகளை வழங்கினால் மகிழ்வேன்.
நாம் உணவை உட்கொள்கிறோம். வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் எச்சிலைச் சுரக்கின்றன. அதனுடன் சேர்த்து உணவை மென்று விழுங்குகிறோம். உணவை உள்ளே தள்ளுகிறது நாக்கு. உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் விடாமல், உணவுக் குழலுக்குள் போக வேண்டும். (அதேபோல, மூச்சுக் குழாய்க்குள் போக வேண்டியது உணவுக் குழாய்க்குள் போகக்கூடாது.) இந்த வேலையை குரல்வளைக்கு (larynx) அருகே உள்ள குரல்வளை மூடி (epiglottis) கவனித்துக் கொள்கிறது. (குரல்வளைதான் நம் குரல் - ஒலி உருவாக்குவதற்கும் பொறுப்பு.) எலாஸ்டிக் போல செயல்படும் இந்த குரல்வளை மூடி, நாம் மூச்சு வாங்கும்போது நிமிர்ந்து, உணவுக் குழாயை மூடிவிட்டு, காற்றை மூச்சுக்குழாய்க்கு அனுப்புகிறது. உணவு உண்ணும்போது, வளைந்து மடங்கி மூச்சுக்குழாய்ப் பாதையை மூடிவிட்டு உணவுக்குழாய்க்கு அனுப்புகிறது.

இந்தச் செயல்களில் எதையும் நாம் கவனிப்பதில்லை. மிக எளிதாகத் தோன்றும் இந்தச் செயல்பாட்டுக்கு ஏராளமான உறுப்புகள் வேலை செய்கின்றன. நாம் உண்டது உணவுதான் என்ற தகவல் மூளைக்கு அனுப்பப்பட்டு, மூச்சுக் குழாய் மூடப்பட வேண்டும், உணவுக்குழாய் திறக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மூளை அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்ப, உடனே குரல்வளை மூடி அதற்கேற்ப செயல்பட்டு, மூச்சுக்குழாய் வாயை மூடிவிட்டு, உணவுக்குழாய்க்கு வழி விடுகிறது. இதேபோல, மூச்சுக்குழாய் திறப்பதற்கும் இந்த எல்லா உறுப்புகளும் செயல்படும். இது சரியாக இயங்கவில்லை என்றால், உணவு மூச்சுக் குழாய்க்குள் சென்று புரை ஏறிவிடுவதுண்டு. நாம் வாயால் உள்ளிழுத்த வாயு அல்லது புகை உணவுக் குழாய்க்குள்ளும் செல்லக்கூடும்.
மேலே குறிப்பிட்டபடி, நாம் உண்ட உணவு, சுமார் 20 செமீ நீளம் உள்ள உணவுக் குழாயின் (esophagus) வழியாக வயிற்றின் மேல் பகுதியை அடைகிறது. பிறகு சிறுகுடலையும் பெருங்குடலையும் அடைந்து, செரித்த பிறகு ஆசனவாய் வழியே கழிவாக வெளியேறுகிறது.
செரிமான அமைப்பு என்பது இரைப்பை குடல் (gastrointestinal tract) மற்றும் கல்லீரல், கணையம், பித்தப்பை ஆகியவற்றையும் கொண்டது. இதில் வாய், உணவுக்குழாய், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் என பல்வேறு உறுப்புகள் குறுக்கும் நெடுக்குமாக இணைந்துள்ளன. இந்த எல்லா உறுப்புகளும் அடங்கிய செரிமான அமைப்புதான் நாம் உண்ணும் உணவை உடைத்து, அரைத்து, அதிலிருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளை மட்டும் பிரித்து எடுத்து அனுப்புகின்றது.
ஊட்டச் சத்துகள்தான் நமக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன, வளர்ச்சிக்கு உதவுகின்றன, செல்களின் பராமரிப்பைச் செய்கின்றன. ஆக, இந்த உறுப்புகள்தான் நாம் உயிர்வாழத் தேவையான ஊட்டச் சத்துகளை உணவிலிருந்து பிரித்து எடுத்து உடலுக்கு அனுப்புகின்றன என்பது புரிகிறது அல்லவா? இந்த உறுப்புகளில் ஏதொன்றில் பிரச்சினை வந்தாலும் அது முழு உடலையும் பாதிக்கும்.
அதற்கான உதாரணம்தான் எனக்கு ஏற்பட்ட நோய். நான் புகைப்பழக்கத்தை நிறுத்தி ஓராண்டுக்கு மேலாகி விட்டதால் எனக்கு வந்த நோய்க்கு புகைப்பழக்கம் காரணமாக இருக்காது என்று நம்புகிறேன். ஆனால், புகைப்பழக்கம் அல்சரேடிவ் கொலிடிஸ் நோய்க்கும், இன்னும் பல நோய்களுக்கும்கூட முக்கியக் காரணியாக இருக்கிறது என்று தெரிந்தது. மேலும் பல விவரங்களைத் தேடியறிந்தேன். கீழே தருகிறேன்.
புகைப்பழக்கம், உயிருக்கே ஆபத்தான பல நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது; நுரையீரல் புற்றுநோய்க்கும், பலவிதமான இதய நோய்களுக்கும் புகைத்தல் முக்கியக் காரணமாகும். அதுமட்டுமல்ல, செரிமான மண்டலத்திலும் பல நோய்களுக்கு புகைப்பழக்கம் காரணமாகிறது. புகைப்பவர்களுக்கு வாய்ப் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் ஆகிய நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு அதிகம்.
புகைப்பழக்கத்தால் செரிமான அமைப்பில் ஏற்படக்கூடிய கோளாறுகள் — நெஞ்செரிச்சல், குடல் அழற்சியால் உண்டது எதுக்களித்து வருதல் (gastroesophageal reflux disease - GERD), வயிற்றுப் புண்கள், கல்லீரல் நோய்கள் போன்றவை. அல்சரேடிவ் கொலிடிஸ் / க்ரோன்ஸ் நோய் (பெருங்குடல் புண்கள்) பெருங்குடல் கட்டிகள், கணைய அழற்சி, பித்தநீர்க் கட்டி (பித்தப்பைக் கல்) உருவாதல் ஆகியவற்றுக்கான ஆபத்துகளும் புகைப்பழக்கத்தால் அதிகமாகும்.
புகைப்பழக்கத்துக்கும் நெஞ்செரிச்சலுக்கும் என்ன தொடர்பு?
உணவுக்குழாய் இருக்கிறதே, அதில் மேலே ஒரு சுரிதசையும் (upper esophageal sphincter - UES), கீழே வயிற்றுப் பகுதியை அடையும் இடத்தில் ஒரு சுரிதசையும் (lower esophageal sphincter - LES) உண்டு. (சுரிதசை என்பது சுருங்கி விரியும் தசைத்தொகுதிகள்.) மேலே இருக்கும் சுரிதசை, உணவுப் பொருட்களும் சுரக்கும் திரவங்களும் மூச்சுக் குழாய்க்குள் போகாமல் தடுக்கின்றன. கீழே இருக்கும் சுரிதசை, வயிற்றுக்குள் இருக்கும் உணவுப் பொருள் திரும்பவும் உணவுக்குழாயில் மேலே வந்து விடாதபடி அடைத்துக் கொள்கிறது.
வயிற்றுக்குள் சென்ற உணவு பல அமிலங்களோடு கலந்து செரிமானம் ஆகிக் கொண்டிருக்கும். புகைப்பதன் காரணமாக இந்த சுரிதசை பலவீனமாகி விடும். அதன் காரணமாக, வயிற்றிலிருந்து அமிலங்களுடன் மேலே வரும் உணவுப்பொருட்களால், நெஞ்செரிச்சல் ஏற்படும், கரகரப்பு ஏற்படும், வயிற்றிலிருந்து உணவு எதுக்களித்து வரும். இதுவே GERD எனப்படுகிறது. தொடர்ந்து இப்படி நிகழ்ந்தால் உணவுக்குழாயின் உள்சுவர்ப்பகுதி பாதிக்கப்படும். இதுவே உணவுக்குழாய் அல்சர் ஆகும். நீண்டநாள் இதற்கு ஆளானால், உணவுக்குழாயில் இரத்தக் கசிவு, புற்றுநோய் என பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். உணவுக்குழாய் புற்றுநோயின் முக்கியக் காரணிகள் – புகைத்தல், மது அருந்துதல், உணவு எதுக்களித்து வருதல்.
புகைத்தலும் வயிற்றுப் புண்களும்—
வயிற்றுப் புண்களுக்கான முக்கிய இரண்டு காரணங்கள் – எச். பைலோரி என்னும் பாக்டீரியா, நீண்டகாலம் வயிற்றுக் கோளாறுகளுக்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது.
புகைப்பதன் காரணமாக, வயிற்றுப் புண்கள் குணமடைவது தாமதம் ஆகும், அல்லது திரும்பவும் புண்கள் உருவாகும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வயிற்றில் உணவை செரிப்பதற்காக அமிலங்களும் என்சைம்களும் உண்டு. வயிற்றின் உட்புறச் சுவர்களில் இவை உற்பத்தி ஆகும். வயிற்றில் உற்பத்தி ஆகும் அமிலங்கள் அதன் உட்புறச் சுவர்களைப் பாதித்துவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காக, ம்யூகஸ் என்னும் சளி போன்ற திரவமும் சுரக்கிறது.
உணவில் இருக்கும் புரோட்டீனை பிரித்தெடுப்பதற்காக வயிற்றில் பெப்சின் என்ற என்சைம் உற்பத்தி ஆகிறது. புகைப்பழக்கம், இந்த என்சைம் உற்பத்தியை அதிகரித்து, உட்புறச் சுவர்களை பாதிக்கக்கூடும். அதேபோல, உள்சுவரை பாதுகாக்கிற, அல்லது புண்களை குணப்படுத்தக்கூடிய சில அம்சங்களைக் பாதிக்கும். அதாவது, உட்புறச் சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ம்யூகஸ் என்னும் திரவம் சுரப்பதைத் தடுக்கும். உள்புறச் சுவர்களை பாதிக்கும் என்சைம்களை அதிகமாக உற்பத்தி செய்தும், சுவரைப் பாதுகாக்கும் காரணிகளைக் குறைத்தும், வயிற்றுப் புண்களுக்கு வழி செய்கிறது புகைப்பழக்கம்.
கல்லீரலில் இருக்கிற பித்தநீர்க் குழாய்களை சிறிது சிறிதாக அழிக்கிற நாள்பட்ட கல்லீரல் நோய் – சிர்ரோசிஸ். கல்லீரலுக்குள் கொழுப்பு சேர வைக்கிற நோய் – மதுசாராத கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD). இந்த இரண்டு நோய்களையும் புகைப்பழக்கம் இன்னும் மோசமாக்கும்.
செரிமான மண்டலத்தில் கல்லீரல்தான் மிகப்பெரிய உறுப்பு. அதன் பணிகள் ஏராளம் — புரோட்டீன் மற்றும் பித்தநீர் தயாரித்தல், உண்ணும் உணவை உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுதல், இரத்தத்தில் உள்ள மது மற்றும் விஷங்களை வடித்தல். மது மற்றும் இதர நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றும் கல்லீரலின் திறனை புகைப்பழக்கம் பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பெருங்குடல் புண்கள்—
புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட, புகைப்பவர்கள், புகைத்துக் கொண்டிருந்தவர்கள் – ஆகிய இரு பிரிவினருக்கும் க்ரோன்ஸ் நோய் எனப்படும் பெருங்குடல் புண்கள் உருவாகும் ஆபத்து அதிகம். க்ரோன்ஸ் / அல்சரேடிவ் கொலிடிஸ் (கடந்த மாதம் எனக்கு வந்த நோய்) ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றே – பெருங்குடல் உட்புறச் சுவர்களில் புண்கள் அல்லது வீக்கம் உருவாக்குபவை. இதன் காரணமாக, கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகமாகவும், அடிக்கடியும் ஏற்படும். கட்டுப்படுத்த அதிக மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கலாம். நிலைமை மோசமானால், புண்கள் உள்ள குடல் பகுதியை நீக்கவும் நேரலாம்.
புகைப்பழக்கம் க்ரோன்ஸ் நோய் ஆபத்தை ஏன் அதிகரிக்கச் செய்கிறது, அல்லது நோயை ஏன் கடுமையாக்குகிறது என்பது குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன. புகைப்பதன் காரணமாக, குடலின் நோயெதிர்ப்புத் திறன் குறைந்து விடுகிறது; குடலுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது; நோயெதிர்ப்பு அமைப்பில் மாற்றங்கள் ஏற்படச் செய்து உட்புறச் சுவரில் வீக்கம் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பரம்பரை காரணமாக க்ரோன்ஸ் நோய்க்கு ஆளானவர்கள் விஷயத்தில், புகைப்பழக்கம் சில மரபணுக்களின் பணியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
பெருங்குடலில் சிறு கட்டிகள்—
புகைப்பவர்களுக்கு பெருங்குடலில் சிறு கட்டிகள் (colon polyps) உருவாகும் வாய்ப்புகள் அதிகம். போலிப் என்பது, பெருங்குடல் அல்லது மலக்குடலின் உட்புறச் சுவர்களில் உருவாகும் சிறிய கட்டிகளாகும். சில கட்டிகள் பெனின் வகையைச் சேர்ந்தவை – அதாவது, புற்றுநோய் ஏற்படுத்தாதவை; ஆனால் சில கட்டிகள் புற்றுநோயாக மாறக்கூடும். புகைப்பவர்களுக்கு பெருங்குடலில் சிறு கட்டிகள் இருந்தால், இவை பெரிதாக, அதிகமாக இருக்கும். குணமான பின்பு மீண்டும் வளரக்கூடும்.
இதேபோல, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு, செரிமானத்துக்கு உதவக்கூடிய நொதிகளை உற்பத்தி செய்யும் கணையத்தில் கணைய அழற்சி ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம். அதாவது, கணையத்தில் வீக்கம் ஏற்படுவது. கணையம் வீங்கினால், செரிமான நொதிகள் கணையத்தின் திசுக்களையே தாக்கும்.
பித்தப்பைக் கற்கள் உருவாகும் ஆபத்தையும் புகைப்பழக்கம் அதிகரிக்கச் செய்கிறது என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஆயினும், தெள்ளத் தெளிவாக நிரூபிக்க இன்னும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள்.
ஆனால் ஒரு விஷயம். புகைப்பழக்கத்தை விட்டொழித்தால், மேற்கண்ட செரிமான அமைப்பின் நோய்கள் சிலவற்றில் பெரும் முன்னேற்றம் காணலாம். உதாரணமாக, ஒருவர் புகைத்துக் கொண்டிருந்தால், கணையம் பைகார்பனேட்டை குறைவாக உற்பத்தி செய்யும். அவர் புகைத்து அரை மணி நேரம் ஆனபிறகு, பைகார்பனேட் அளவு இயல்பு நிலைக்கு வந்து விடும். புகைப்பதை நிறுத்திய சில மணி நேரத்துக்குள் வயிற்றின் உட்புறச் சுவர்களை பாதிக்கிற – பாதுகாக்கிற காரணிகள் இடையே சமநிலை ஏற்படுகிறது.
இருப்பினும், புகைப்பவர்களுக்கு மட்டுமல்ல, புகைப்பதை நிறுத்தியவர்களுக்கும்கூட பெருங்குடல் சிறுகட்டிகள், கணைய அழற்சி, க்ரோன்ஸ் நோய் ஏற்படக்கூடும் என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
ஆயினும், ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். புகைப்பதை நிறுத்துவதால் செரிமான உறுப்புகளின் நோய்கள் மேலும் மோசமடையாமல் தடுக்க முடியும். புகைப்பதை விட்டொழித்தவர்களுக்கு க்ரோன்ஸ் நோய் வருமானால், புகைப்பவர்களுக்கு இருப்பதைவிட நோயின் தீவிரம் அவர்களுக்குக் குறைவாகவே இருக்கும்.
ஆக, புகைப்பதன் காரணமாக —
வாய்ப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், உணவுக்குழாய்ப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் ஆபத்து அதிகம்
நெஞ்செரிச்சல், வயிற்றில் உள்ள உணவு எதுக்களித்து வருதல் ஏற்படும்.
வயிற்றுப் புண்கள் உருவாகும் ஆபத்து அதிகம்.
கல்லீரலைப் பாதிக்கும் முக்கிய இரண்டு நோய்கள் வரும் ஆபத்து அதிகம்.
கணைய அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
க்ரோன்ஸ் நோய் / அல்சரேடிவ் கொலிடிஸ் (பெருங்குடல் புண்கள்), பெருங்குடல் கட்டிகள் ஏற்படும். அல்லது இந்த நோய்களின் தீவிரம் அதிகமாகும்.
இத்தனை நோய்களுக்கும் – அல்லது நோய் வந்த பிறகு அவற்றை இன்னும் கடுமையாக்கவும் காரணமாக இருக்கிறது புகைப்பழக்கம் என்று தெரிந்த பின்னும் சிகரெட்டைத் தொட முடியுமா என்ன?
புகைப்பழக்கத்தை விட்டொழித்தால், இந்த நோய்களில் சிலவற்றில் முன்னேற்றம் காண முடியும் என்று தெரிந்த பின்னாலும் விட்டொழிக்காமல் இருக்க முடியுமா?

Shahjahan R

No comments: