Friday, November 17, 2017

நாயகம் எங்கள் தாயகம் --வலம்புரிஜான்


6. வள்ளல் வளர்ந்தார் !
(பக்கம் - 69)
O
முகம்மது வளர வளர
அற்புதங்கள் தங்களுக்கு
அரைஞாண்கயிறு
கட்டிக்கொண்டன ...
அற்புதங்களா ?
இயற்கையே ஓர் அற்புதம்தான்.
ஆளில்லாக் காட்டிற்குள்
ஆயிரமாய் பூமலரும்.
ஆருமில்லை பார்ப்பதற்கு
அப்புறம் ஏன் பூக்கிறது?
காதில் முடி வளர்கிறது ...
காது இப்போது வளர்கிறதா ?

கல்லுக்குள் தேரை ...
நினைத்தால் பொறிக்கிற ஆமை ...
உயர்ந்தே பிறக்கின்ற
ஒட்டகச் சிவிங்கி ...
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை ...
தொட்டிக்குள்
சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும்
அத்திமரம் ...
அலுமினிய ஆப்பிள்கள் ...
பீங்கான் நாற்காலிகள் ...
ஹெல்மெட்டோடு தூங்குகின்ற மனிதர்கள்
கொடிகளை அறுத்துக் கொண்டே
குதிக்கிற குழந்தைகள் ...
அம்மாக்களைத் தூங்கவைக்கும்
தொட்டில்கள் ...
எல்லாமே அற்புதம் தான் !
சாவின் தள்ளுபடி
வாழ்வாகிப்போனது ...
வாழ்வோ
மலிவு விலைச்
சாவாகிப் போனது ...
எல்லாமே அற்புதம் தான் !

O

சங்கு சக்கரங்களுக்குள்ளே
பறிக்கப்பட்ட ...
சிவகாசிக் குழந்தைகளின்
சிரிப்பு ...
மத்தாப்பு மைதானங்களில்
சிறை வைக்கப்பட்டிருக்கிறது !
பண்டிகை தோறும்
கைதான சிரிப்பிற்கு
விடுதலை கிடைக்கும்.
அப்போதும்
களவாடப்பட்ட சிரிப்பு
உரியவர்களிடம்
ஒப்படைக்கப்படுவதில்லை !
இந்த உலகம்
அற்புதத்தில் அவதரித்து
அநியாயத்தில் நடக்கிறது !

O

ஆறுமாதத்திற்கு ஒரு தடவை
‘ஹலீமா’
முகம்மது என்கிற வெளிச்சத்தை
ஆமினாவின் கண்களில்
விதைத்துவிட்டுப் போவாள் !
இதயம் நிறைந்த தனது
இசைப்பாடல் ...
பல்லவியைத்தாண்டி
அனுபல்லவிக்குள்
அடியெடுத்து வைப்பதைப்
பார்த்துப் பார்த்து
ஆமீனா பூரித்துப் போனாள் !
வானம் தனது எல்லைகளை
அகலமாக்கிக் கொண்டால் ...
பறந்து பார்க்க வேண்டும் என்று
பட்டது அவளுக்கு !

___________________________________________________
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: