Tuesday, November 7, 2017

கருத்து வேறுபாடுகள் ஆபத்தானது கிடையாது ! ...

தக்கலை கவுஸ் முஹம்மத்
கருத்து வேறுபாடுகள் குறிப்பாக அடிப்படை(அகீதா) அல்லாத விஷயங்களில் அது ஆகுமானதே! மாறாக பிிரிவினையும் பகை உணர்வும் தான் ஆபத்தான விஷயங்கள்,. அல்லாஹ்வும் அவனது ரசூலும் எச்சரித்ததும் அவற்றைத்தான்!
எனவே கருத்து வேறுபாடுகள் பற்றிய புரிதலும், அது பற்றிய அறிவும் நம் அனைவருக்கும் இன்று இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமிய கல்வி நிலையங்களும் இவை குறித்து ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஆம்! ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடு குறித்து புரிந்து வைத்திருந்தனர். தாபியீன்கள் இதைப் புரிந்து வைத்திருந்தனர். புகழ்பெற்ற அன்றைய இமாம்களும் இதை அறிந்து வைத்திருந்தனர். எனவே தான் அவர்களுக்கிடையே எந்த முரண்பாடுகளும் பகைமையும் வளரவில்லை.
கருத்து வேறுபாடுகள் என்றால் என்ன என்றே நம்மில் பலருக்கும் தெரியவில்லை. எனவே நாம் ஒருவரோடு ஒருவர் பகைமை பாராட்டுகிறோம். வேறு எந்த காரணமுமின்றி சின்னச் சின்ன மஸ்அலாக்களின் காரணத்தால் நாம் இன்று சண்டை போடுகிறோம்.
எனவே இது தொடர்பாக இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை நாம் முதலில் விளங்கி கொள்ள வேண்டும்.
- [மௌலவி நூஹ் மஹ்லரி] அவர்கள் எழுதிய "கருத்துவேறுபாடுகள்-அருளா? அழிவா?" நூலிலிருந்து..
அறிஞர் ஷாதிபீ(ரஹ்) அவர்கள் தமது “அல் முவாபிகாத்” என்ற நூலில் குறிப்பிடும் போது,
“கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அந்த கருத்து வேறுபாடுகளால் குரோதமோ, பகைமையையோ, பிரிவினையோ ஏற்படவில்லையென்றால் அதன் மூலம் அது இஸ்லாமிய அடிப்படையில் உருவான கருத்து வேறுபாடு என்று அறிந்துகொள்ளலாம். எனவே, கோபத்தையும், குரோதத்தையும், பிரிவினையையும் உருவாக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும் அறிந்துகொள்ளலாம்.
நாம் புரிந்து கொண்டதற்கு மாற்றமான கருத்தை முன்வைப்பவர்கள் பல ரகத்தினர்களாக இருப்பார்கள். சிலர் மாற்றுக் கருத்துக்களைக் களைவதை விட மாற்றுக் கருத்துடையவர்களின் கண்ணியத்தையும் சமூக அந்தஸ்தையும் குறைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இது சாதாரண கருத்து வேறுபாட்டை குரோதமாக மாற்றி விடுகின்றது. குத்தல் வார்த்தைகளால் எழுதும் போதும், பேசும் போதும் விரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்கள் கூறும் போது,...“நான் யாருடன் வாதிட்டாலும் சில போது சத்தியம் அவர் பக்கம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இன்றி வாதிட்டதே கிடையாது” என்று குறிப்பிடுகின்றார்கள்.
- இஸ்மாயில் ஸலபி

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: